குண்டுத் தாக்குதல்கள் வெளிநாட்டின் நிகழ்ச்சி நிரலாக இருந்தாலும் தமிழரே இலக்கு!
குண்டுத் தாக்குதல்கள் வெளிநாட்டின் நிகழ்ச்சி நிரலாக இருந்தாலும் தமிழரைக் கருவறுக்கும் செயற்பாடாகவே பார்க்கமுடிவதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் அரபு மொழிகளில் கட்டடங்கள் காணப்படுகின்ற நிலையில், நாட்டிற்கும் அரபுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்று கேள்வியெழுப்பிய அவர், போரிற்குப் பின்னர் தீடீர் பணக்காரர்களாக மாறியவர்களை் குறித்த விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கொல்லபட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
“இலங்கையில் மூன்று மொழிகளே அரச கரும மொழிகளாக காணப்படுகின்றன. ஆனால் அண்மைய நாட்களில் அரபு மொழியிலே பல கட்டடங்களின் பெயர் பலகைகள் திறக்கப்பட்டிருக்கிறது.
அரபு மொழிக்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்பதை விசாரிக்கவேண்டும்.
இன்று இந்த அரசானது ஒரு சில தலைமைகளின் சுய நலங்களுக்காக நாட்டையே குட்டி சுவராக்கிக்கொண்டிருக்கும் செயற்பாட்டை மேற்கொள்கிறது. எனவே இந்த அரசாங்கம், முப்படையினர், புலனாய்வாளர்கள், பொலிஸாரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
போருக்குப் பின்னர் இந்த நாட்டிலே திடீர் பணக்காரர்களாக மாறியவர்களைப் பற்றி விசாரியுங்கள். அவர்களுக்கு இந்த பணம் எப்படி வந்தது என்று விசாரியுங்கள்.
அதேபோல் இலங்கையில் மூன்று மொழிகளே அரசகரும மொழிகளாக காணப்படுகின்றன. ஆனால் அண்மையில் அரபு மொழியிலே பல கட்டடங்களின் பெயர் பலகைகள் திறக்கப்பட்டிருக்கின்றன.
அரபு மொழிக்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. எனவே அந்த விடயங்கள் விசாரிக்கப்பட வேண்டும்.
கொல்லப்பட்டவர்களை கத்தோலிக்கர்களாக பார்க்க வேண்டாம். அவர்கள் முற்றுமுழுதாக தமிழர்கள். மிகத்தெளிவாக தாக்குதலுக்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.
ஒரு பௌத்த விகாரையும் இலக்கு வைக்கப்படவில்லை. ஒரு சிங்கள பௌத்தனும் உயிரிழக்கவில்லை. வெளிநாட்டின் நிகழ்ச்சி நிரலாக இருந்தாலும் எம்மை கருவறுக்கும் செயற்பாடாகவே இந்த தாக்குதலை பார்க்கமுடியும்.
தற்போதைய நிலையில் ஒவ்வொரு இயங்கங்களும் தம்மை சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டும்.
போராட்ட காலங்களிலே விரும்பியோ, விரும்பாமலோ பல தவறுகளை நாம் செய்திருக்கின்றோம்.
இனிவரும் காலங்களிலாவது நாம் ஒற்றுமையாக செயற்படுவதனூடாகவே எமது மக்களைக் காப்பாற்ற முடியும். எனவே அனைத்து இயக்கங்களும் மனந்திறந்து பேசவேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.