தீவிரவாதத்தை உடனடியாக இல்லாதொழிக்க முடியாது!
இலங்கையிலிருந்து தீவிரவாதத்தை உடனடியாக இல்லாதொழித்துவிட முடியாதென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் வரை பாடசாலைகளை திறக்காமல் இருப்பதுவே சிறப்பானதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே சரத் பொன்சேகா இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“இந்த பயங்கரவாதச் செயற்பாட்டை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது என்பதுதான் எமது தனிப்பட்ட கருத்தாகும்.
எனினும், இது சில அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை. நாம் தற்போது முகம் கொடுத்துள்ள பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.
இதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரது கோரிக்கையாகவும் இருக்கிறது.
மேலும், எமது நாட்டில் கடந்த காலங்களில், யுத்தம் முடிவடைந்தவுடன் இராணுவத்தின் உடைகள் விற்பனை செய்யப்பட்டன.
இந்நிலையில், தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள இராணுவ ஆடைகள் எவ்வாறானவை என்பதை ஆராய வேண்டும்.
வாள்கள் குறித்தும் பாதுகாப்புத் தரப்பினர் தேடிப்பார்க்க வேண்டும். எவரும் சட்டத்தை கையில் எடுப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
எமது பாதுகாப்பு கட்டமைப்பு, யுத்த காலத்தில் செயற்பட்டதைப் போல செயற்படுவதாக நான் கருதவில்லை.
இதனை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால், பாடசாலைகளை திறப்பதை தாமதப்படுத்துவது நல்லது என்றே நான் கருதுகிறேன்.
பாடசாலை தொடர்பில் அதிக அவதானம் செலுத்த வேண்டும். நூறு வீதம் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டது என்று கூற இன்னும் இரண்டு வருடங்களாவது தேவை.
எனினும், தற்காலிகமாக இராணுவத்தின் ஊடாக மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த முடியும். மக்கள் அனைவரும் அச்சத்துடன்தான் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு பிழையான கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடாது என்பதே எனது கருத்தாக இருக்கிறது” என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.