பிரபாகரனுக்காகவும், தங்கள் அமைப்புக்காகவுமே புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்… ஆனால் ஐ.எஸ்?

பிரபாகரனுக்காகவும், தங்கள் அமைப்புக்காகவுமே புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்… ஆனால் ஐ.எஸ் அமைப்பினர்…?

புலிகள் அமைப்பினர் தமது தலைவர் பிரபாகரனுக்காகவும், தங்கள் அமைப்புக்காகவுமே தற்கொலைத் தாக்குதலில் உயிரை விட்டனர். ஆனால், ஐ.எஸ். பயங்கரவாதிகள் தமது உயிர்களை விடுவது, தாம் தவறான முறையில் விளக்கம் பெற்றுக் கொண்டுள்ள சிந்தனை ரீதியிலான ஒரு கருத்துக்காகவாகும் என இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து இயங்கும் சிங்களத் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது, மிகப் பெரும் பயிற்சியொன்று இல்லாமல் இவ்வாறான தற்கொலைத் தாக்குதலை நடாத்த முடியுமா? இந்த பயங்கரவாதிகள் இதற்கு எங்கு பயிற்சி பெற்றுள்ளனர் என்று இராணுவத் தளபதியிடம் கேட்கப்பட்டது.

இதற்குப் பதில் வழங்கிப் பேசிய அவர்,

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடாத்திய தற்கொலைத் தாக்குதலுக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றன.

தற்கொலைத் தாக்குதலை நடாத்துவதற்கு இவர்களின் பயிற்சியை விடவும், மனோநிலைதான் இங்கு முக்கியமானது.

நாம் புலிகளுடன் நடாத்திய 30 வருட யுத்தத்தை விடவும் மாற்றமான ஒன்றாக இது உள்ளது.

புலிகள் அமைப்பினர் தனது தலைவருக்காகவும், அமைப்புக்காகவுமே தற்கொலைத் தாக்குதலில் உயிரை விட்டனர்.

மாறாக, இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தமது உயிர்களை விடுவது, தாம் தவறான முறையில் விளக்கம் பெற்றுக் கொண்டுள்ள சிந்தனா ரீதியிலான ஒரு கருத்துக்காகவாகும்.

இந்த சிந்தனா ரீதியிலான போராட்டத்துக்கு உடலியல் ரீதியிலான பலத்தை விடவும், மானசீக ரீதியிலான பலமே முக்கியமாகும். இத்தகையவர்களுக்கு பாரிய பயிற்சிகள் தேவைப்படுவதில்லை.

நான் இவ்வாறு கூறுவதற்கான காரணம் இருக்கின்றது. நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தை பார்க்கும் போது, ஹொட்டல் ஒன்றில் வைத்து தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்ய முயற்சி செய்கின்றார்.

இருப்பினும், அது வெடிக்கவில்லை. மீண்டும் அவர் பள்ளிவாயலுக்கு சென்றுவிட்டு, தெஹிவளை விடுதிக்குள் செல்கின்றார். அங்கு இதனை வெடிக்கச் செய்யும் விதமாக தயார் செய்யும் போதே வெடித்திருக்கும் என ஊகிக்க முடியுமாக உள்ளது.

விடுதியில் இதனை செயற்படுத்தக் கூடியதாக சரிசெய்யப்பட்டிருந்தால், அருகிலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வெடிக்கச் செய்திருக்கலாம். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.

இதிலிருந்து புரிந்து கொள்ள முடியுமான முக்கிய விடயம்தான், இந்த பயங்கரவாதி மனோ ரீதியாக பித்துப் பிடித்தவராக மாறியுள்ளார் என்பதாகும். இந்த தாக்குதல்கள் இடம்பெற்ற வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது இவர்கள் பாரிய பயிற்சிகளைப் பெற்றவர்களா? என்ற சந்தேகம் எழுகின்றது என்றார்.

முன்னதாக, சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு செவ்வி வழங்கிய இராணுவத் தளதிபதி, இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இந்தியாவில் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கிருந்து தான் இவர்கள் பெரும் திட்டத்தை வகுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இராணுவத்தளபதியின் இக் கருத்தினை அடுத்த இந்திய புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 9986 Mukadu · All rights reserved · designed by Speed IT net