900 இலட்சம் ரூபா செலவில் சுற்றுலா முக்கோண வலயம்.
ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் மையமாகக் கொண்டு சுற்றுலா முக்கோண வலயமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத் துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
வரலாற்று சிறப்பு மிகு வெல்லவாய புதுருவகல விகாரையில் நிர்மாணிக்கப்படவுள்ள சுற்றுலா பொதுவசதிகள் கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது தெரிவித்ததாவது, இந்த மாவட்டங்களை அடிப்படையாகாக் கொண்டு புதிய சுற்றுலா முக்கோண வலயமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்துக்கு 900இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது.
இத்திட்டத்தை ஆறு மாதகாலத்துக்குள் பூர்த்திசெய்வதற்கு உத்தேசித்துள்ளோம். இதன் முதற் கட்டமாக பாதுகாப்பு அறைகள்,தன்னியக்க பண இயந்திரங்களை பொருத்துதல்,சிற்றுண்டிச்சாலை, கைப்பணி விற்பனைநிலையம், பிரவேச அட்டை விநியோக பிரிவு, தகவல் காரியாலயம் மற்றும் அடிப்படைவசதிகள் பிரிவு என்பனவற்றினை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.
சுற்றுலாத் துறையினை அபிவிருத்தி செய்து தேவையானஅடிப்படை வசதிகளையும் மேம்படுத்தவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இதற்காக 900 இலட்சம் ரூபாவினை ஒதுக்கியுள்ளோம். மேலும் எமது நாட்டில் கலாசார முக்கோண வலயமான அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையிலும் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும். என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார, பிரதிசபாநாயகர் ஆனந்தகுமாரசிரி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.