பிளாஸ்டிக் மாசு காரணமாக 30 விநாடிகளுக்கு ஒருவர் மரணம்!
பிளாஸ்டிக் மாசு மற்றும் சேகரிக்கப்படாத குப்பைகளின் காரணமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒவ்வொரு 30 விநாடிகளிலும் ஒருவர் உயிரிழப்பதாக புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கொட்டப்படும் இடங்களுக்கு அருகில் வசிப்பதால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, மலேரியா மற்றும் புற்றுநோய் போன்றவற்றால் ஒவ்வொரு வருடமும் சுமார் ஒரு மில்லியன் வரையிலான மக்கள் உயிரிழப்பதாக இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிவாரண மற்றும் அபிவிருத்தி நிறுவனமான Tearfund, அபிவிருத்தி ஆய்வுகள் நிறுவனம், WasteAid மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளையான Fauna & Flora International (FFI) ஆகியவை இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.
வனவிலங்கு மட்டுமல்லாது உலகின் ஏழ்மையான மக்கள் எதிர்கொள்ளும் பிளாஸ்டிக் மாசின் பாதிப்புகளை முன்னிலைப்படுத்தும் முதலாவது அறிக்கையாக இது அமைந்துள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலரான டேவிட் அட்டன்பரோ தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில், இரண்டு பில்லியன் மக்கள் அல்லது உலகில் உள்ள நான்கு பேரில் ஒருவரது கழிவுகள் ஒழுங்கான முறையில் சேகரிக்கப்படுவதில்லை.
இது நதிகளில் சேர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கும் தொற்றுநோய்கள் பரவுவதற்கும் காரணமாக அமைகின்றது.
உலகில் பலர் கழிவுகளை எரிப்பதன் மூலம் அதை அகற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். ஆனால் கழிவுகளை எரிப்பது ஆபத்தான புகை உருவாக்குவதற்கும், சில நாடுகளில் கார்பன் உமிழ்வுகளின் மிகப்பெரிய மூலப்பொருளாகவும் அமைகிறது என இந்த ஆய்வின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோகோ கோலா, நெஸ்லே, பெப்சிகோ மற்றும் யுனிலீவர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை 2025 ஆம் ஆண்டுக்குள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் விநியோகிக்கப்படும் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் எண்ணிக்கையை கணிசமான அளவுக்கு குறைக்கும் வகையில் தமது வணிகமாதிரியை மாற்றியமைக்குமாறு இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.