மக்களை அச்சத்திற்குள் வைத்திருக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது!
மக்களை அச்சத்திற்குள் வைத்திருக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முஸ்லிம் மக்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை பிரயோகித்து, பயங்கரவாத செயற்பாடுகளை செய்வதற்கான மனோநிலையை ஏற்படுத்திவிடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ரிஷாட் பதியுதீன் குற்றவாளியாக இனங்காணப்பட்டால் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தீர்மானிப்போம் எனவும் அவர் கூறினார்.
ரெலோவின் முன்னாள் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் கிறிஸ்ரி குகராஜாவின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியா வைரவர் புளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபியில் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.
அதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தற்போதைய பயங்கரவாதம் எமது மக்களை கடுமையாக பாதித்துள்ளது. தமிழர் பகுதிகளிலேயே இராணுவ சோதனைச் சாவடிகள் பல அமைக்கப்பட்டுள்ளன.
இன்று மக்களை அச்சத்திற்குள் வைத்திருக்கும் சூழல் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை 2009ற்கு முற்பட்ட போருடனான காலத்துடன் ஒப்பிடமுடியும்.
சோதனை செய்வதில் தவறில்லை. ஆனால் அது கெடுபிடியாக மாறக்கூடாது. அத்துடன் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாக பார்கின்ற ஒரு மனோநிலை தற்போது காணப்படுகின்றது. அது நிறுத்தப்படவேண்டும்.
முஸ்லிம் மக்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை பிரயோகிக்கும் போது அவர்களின் நிலையில் மாற்றம் ஏற்படும். மீண்டும் பயங்கரவாதிகளுடன் இணைந்தாலென்ன என எண்ணும் சூழலை அவர்களிடத்தில் உருவாக்கிவிடும். எனவே அந்த சூழலை ஏற்படுத்திவிடக் கூடாது.
எனவே சிங்கள மக்களோ, தமிழ் மக்களோ அவர்களை தாக்குகின்ற நிலையிலிருந்து மாறவேண்டும். பொதுமக்கள் தமது கருமங்களை அமைதியான முறையில் ஆற்றவேண்டும். அனைத்து மக்களும் இந்த விடயத்தில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இன்று மக்களை நிர்க்கதிக்குள் தள்ளுகின்ற நிலமையை ஏற்படுத்தி விட்டு ஜனாதிபதி சீனாவிற்கு சென்றுள்ளார்.
அவர் சென்றவுடன் இங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இப்படியான நேரத்தில் நாட்டிலிருந்து அதனை தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பதே அரச தலைவரின் கடமையாக இருக்கவேண்டும். இந்த பிரச்சினையை அரசியலாக்க யாரும் முனையக்கூடாது.
இன்று ஊடகங்கள் தமது பணியை மிகச்சிறப்பாக செய்து வருகின்ற நிலையில் அவர்களுக்கு சேறுபூசும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொள்கின்றார்கள்.
அது கண்டிக்கப்பட வேண்டியது. போராட்ட காலங்களில் பல்வேறு விடயங்களை ஊடகங்களே வெளிக்கொணர்ந்திருந்தன” என்று தெரிவித்தார்.