இலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தி இராணுவத்தை களமிறக்க அமெரிக்கா முயற்சி!

இலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தி இராணுவத்தை களமிறக்க அமெரிக்கா முயற்சி!

இலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தி தமது நாட்டு இராணுவத்தை களமிறக்கவே அமெரிக்கா முயற்சித்து வருவதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“மக்களின் கோபத்துக்கு அரசாங்கம் ஆளாகிவிடக்கூடாது. நாம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்துள்ளோம்.

இந்நிலையில், இந்நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் ஆதரவளித்தால் தான் அரசாங்கத்தை விட்டு விலகவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் கூறியுள்ளார்.

இதேவேளை, தங்களின் ஆதரவு இல்லாவிட்டால் அரசாங்கம் கவிழும் நிலைமை ஏற்படும் என முஜிபூர் ரஹ்மானும் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால், ரிஷாட்டை பாதுகாக்கவே அரசாங்கம் முற்படும்.

இந்த நாட்டில் இடம்பெற்ற தாக்குதால் சிங்களவர், தமிழர் மற்றும் கிறிஸ்தவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் அடிப்படைவாதத்துக்கு ஆதரவளிக்கும் அமைச்சருக்கு எதிராக ஏன் வாக்குமூலம் கூட எடுக்கப்படவில்லை என்பதை நன்றாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தாக்குதலுக்கு பிறகு இடம்பெற்ற வன்முறையிலும் கீழ்தரமான அரசியல் இருக்கிறது. கிராமத்தில் இருக்கும் அப்பாவி முஸ்லிம்கள் இதனை உணர்ந்திருப்பார்கள்.

வெளியில் இருந்து வந்தவர்களால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை அரசாங்கம் முதலில் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து, எம்மீது இந்தக் குற்றத்தை சுமத்த முற்படக்கூடாது. 83 கலவரத்தை மேற்கொண்டு எதிர்க்கட்சிகளை அடக்கியதுபோல, தற்போதும் அடக்கப்பார்க்கிறார்கள். இதற்கு நாம் இடமளிக்க முடியாது.

இவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்ளாவிட்டால், திருகோணமலையில் 7000 ஏக்கருக்கு அமெரிக்க முகாமொன்று வருவதை அனைவரும் பார்க்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

இது பாரிய ஆபத்தான நிலையாகும். இதனை அனைவரும் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.

சிங்களம்- முஸ்லிம் மக்கள் மோதிக்கொண்டால் அதன் நன்மை அமெரிக்காவுக்கே கிடைக்கும். அமைதியான நாட்டில் அமெரிக்காவால் கால் ஊன்ற முடியாது என்பதாலேயே நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்த முயல்கிறது.

அரசாங்த்தினால் கைச்சாத்திடப்படவுள்ள ஏ.சி.எஸ்.ஏ. உடன்படிக்கையின் ஊடாக விசேட சந்தர்ப்பமொன்றில், நாட்டுக்குள் அமெரிக்க இராணுவத்தை இறக்க முடியும் என்ற சரத்து காணப்படுகிறது.

அவ்வாறான விசேட சந்தர்ப்பத்தையே அமெரிக்கா பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.

சாய்ந்தமருதில் தற்கொலைத் தாக்குதலால் இறந்தவர்கள் இரண்டாவது தாக்குதலை நடத்த திட்டமிட்டிருக்கக்கூடும்.

கிழக்கில் இன்றும் சில இடங்களில் ஷரியா சட்டம் இருப்பதாக மக்களே குறிப்பிட்டுள்ளார்கள். இவையனைத்தையும் நிறுத்த வேண்டும்.

முதலில், இந்த செயற்பாடுகளை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முற்படுவதை அனைவரும் நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Copyright © 8722 Mukadu · All rights reserved · designed by Speed IT net