பயங்கரவாதம் என்றால் என்னவென்று காட்டிவிட்டுச் சென்ற நாள்!

பயங்கரவாதம் என்றால் என்னவென்று காட்டிவிட்டுச் சென்ற நாள்!

ஏக்கம், துன்பம், வேதனை ஏன் சந்தோசத்தின் உச்சத்திலும் அதனை பகிர்ந்துகொள்ள இறைவனையே நாடிச் செல்கின்றோம்.

ஆறுதல் தேடிச் சென்ற இடத்தில் அதனை தொலைத்துவிட்டு ஏங்கும் நிலை எதிரிக்கும் ஏற்பட வேண்டாம்.

இற்றைக்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர், அதாவது ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று அந்த கோரச் சம்பவம் நடந்தேறியது.

குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இறையருளை நாடிச் சென்றவர்கள் நொடிப்பொழுதில் வெடித்துச்சிதறிய குண்டுகளில் சிக்குண்டு சின்னாபின்னமாகிய அந்த கோரச்சம்பவம் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதமாகின்றது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு அதிர்ச்சியிலிருந்து மீள முன்னர், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய சென் செபயஸ்டியன் ஆலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் என மூன்று ஆலயங்கள் அடுத்தடுத்து இலககுவைக்கப்பட்டன.

அதுமட்டுமா? கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விடுதிகளும் இலக்குவைக்கப்பட்டன. விளைவு… சுமார் 250இற்கும் மேற்பட்ட உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. ஐநூறிற்கும் அதிகமானோர் கடுமையான காயங்களுக்கு உள்ளானர்கள்.

தாக்குதலுக்குள்ளான கொச்சிக்கடை பிரதேசத்தை நோக்கி இன்று நாம் பயணித்தோம்.

உயிருக்கு உயிரான சொந்தங்கள் தன் கண்முன்னே துடிதுடித்து இறக்க, அந்த சோகத்தின் வலியை கண்ணிலும் நெஞ்சிலும் தாங்கியவாறு சோகமே உருவான முகங்கள் எம்மை வரவேற்றன.

குடும்பமாக தேவாலயத்திற்குச் சென்றவர்கள், திரும்பி வரும்போது தாயை இழந்து, தந்தையை இழந்து, சிலர் இருவரையுமே இழந்து, சிலர் தமது பிள்ளைகளை இழந்து, நண்பர்களை இழந்து என ஒரு சில நிமிடங்களில் எல்லாம் நடந்தேறிவிட்டது.

சர்வதேச பயங்கரவாதம் எந்தளவு கொடூரமானதென முதற்தடவையாக எமக்கு காட்டிவிட்டுச் சென்றிருக்கின்றது.

தசாப்தங்கள் கடந்த போராட்டத்திலிருந்து மீண்டு நிலையான சமாதானத்தை நோக்கி பயணிக்கையில் இந்த தாக்குதல் ஒரு பேரிடியே.

இந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்கை திருநாட்டின் அமைதி அன்று பறிபோனது. அன்று களையிழந்து போன நகரங்கள் பீதியின் உச்சத்திலிருந்து இன்னும் மீளவில்லை.

எமது நாட்டின் அழகில் ஈர்க்கப்பட்டு குடும்பத்துடன் குதூகலிக்க வந்த வெளிநாட்டு மக்கள், பாதி உறவுகளை தொலைத்துவிட்டு வெறுங்கையுடன் செய்வதறியாது தவித்த நொடிகள் இன்னும் எம்முன் நிழலாடுகின்றது.

ஒருவருடைய அனுமதியில்லாமல் அவர் சம்மந்தப்பட்ட எந்த விடயத்திலும் எவரும் தலையிட முடியாது. அவ்வாறிருக்கையில் உயிரைப் பறிக்கும் உரிமையை யார் கொடுத்தது?

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் இன்னும் பலமடங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற எச்சரிக்கை இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதனை வெற்றிகொள்வதே அரசாங்கத்தின் சவாலாகும்.

மாண்டோர் மீண்டுவர மாட்டார் என்ற போதிலும், இனியொருபோதும் அந்த அவலம் நிகழாதிருக்க பிரார்த்திப்போம்.

Copyright © 8071 Mukadu · All rights reserved · designed by Speed IT net