யாழில் பிறந்த நாளைக் கொண்டாட ஒன்றுதிரண்ட ஆவா குழுவினர்!
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழுவின் உறுப்பினர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போதும் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்படும் சந்தேகநபர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் இன்று (22) புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்திக்கு அண்மையாகவுள்ள விடுதி ஒன்றில் ஆவா குழு உறுப்பினர்கள் 50 பேர் வரை திரண்டுள்ளனர்.
ஆவா குழுவின் உறுப்பினரான மனோஜ் என்பவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு அவர்கள் திரண்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் சிறப்புப் பொலிஸ் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தது.
அதனடிப்படையில் அந்த விடுதிக்குள் சிறப்புப் பொலிஸ் பிரிவினர் நுழைந்தனர். எனினும் பொலிஸார் உள்நுழைவதை அறிந்த முக்கிய சந்தேகநபர்கள் விடுதியின் பின்பக்க மதிலால் பாய்ந்து தப்பி ஓடியுள்ளனர்.
அங்கிருந்த சுமார் 30 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஐந்து பேரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
யாழ்ப்பாணத்தில் நடந்த அண்மைய வன்முறைகளுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்களே தப்பி ஓடினர்.
அவர்கள் தமது மோட்டார் சைக்கிள்களையும் கைவிட்டு விடுதியின் பின்பக்க மதிலால் தப்பித்தனர் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட ஐவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இல்லாவிடின் அனைவரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்படுவர் என்று பொலிஸார் கூறினர்.