யாழ்.பல்கலை கற்றல் செயற்பாடுகள் முடங்கியது?

யாழ்.பல்கலை கற்றல் செயற்பாடுகள் முடங்கியது ?

யாழ். பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் இன்று முடக்கமடைந்தமையால் மீள பல்கலைக்கழகத்தை திறக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகிய மூவரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கும்வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிததிருந்தது.

இந்தத் தீர்மானத்தை எழுத்து மூலமாக யாழ். பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு மாணவர் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளனர்.

நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஒரு மாதகாலத்துக்கு மூடப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழம் இன்று புதன்கிழமை ஆரம்பமாக இருந்த நிலையில் மாணவர் ஒன்றியம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம், மாவீரர்களின் புகைப்படங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன.

அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அத்துடன் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட சிற்றுண்டிச்சாலையில் தியாக தீபம் திலீபனின் புகைப்படம் மீட்கப்பட்டதையடுத்து சிற்றுண்டிச்சாலை உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டார்.

மூவர் மீதும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 4 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

அதனால் மூவரையும் கடந்த 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பின்னர் மூவரினதும் விடுவிப்பு தொடர்பில் சட்டமா அதிபருடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேரில் பேச்சு நடத்தியிருந்தார்.

அந்தப் பேச்சின் பயனாக – சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய கடந்த 16ஆம் திகதி மூவரையும் நீதிமன்று பிணையில் விடுவித்தது. வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகிய மூவரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கும் வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிப்பதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

தமது போராட்டத்துக்கு இடையூறு விளைவிக்கப் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் பல்கலைக்கழகத்தை முழுமையாக முடக்கும் நிலைக்குத் தாம் தள்ளப்படுவார்கள் என்றும் மாணவர் ஒன்றியம், தகுதிவாய்ந்த அதிகாரிக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

Copyright © 8263 Mukadu · All rights reserved · designed by Speed IT net