ரிஷாத் இராஜினாமா செய்யத் தயார்!
ஜனாதிபதியும் பிரதமரும் கோரிக்கை விடுத்தால் அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் எனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியூதீன், நானும் எனது கட்சியை சேர்ந்த இரண்டு பிரதி அமைச்சர்களும் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு பாராளுமன்றத்தில் பின்வரிசை ஆசனத்தில் அமர்வதற்கு தயாராக உள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விளக்கமளித்துள்ளார். தனக்கு எதிராக எதிரணியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள பத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர் விளக்கி கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை விடுக்குமாறு இராணுவத்தளபதியிடம் தான் கோரியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு மற்றும் குண்டுத்தாரிகளான சகோதரர்களின் தந்தையான இப்ராஹிம் உடனான தொடர்பு குறித்த குற்றச்சாட்டு என்பன குறித்தும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார். தன்மீதான குற்றச்சாட்டுக்கள் அபாண்டமானவை என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.