திருகோணமலை கண்னியா வெந்நீரூற்று பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் உடைக்கப்படும் நடவடிக்கையும் சிவன் ஆலயத்தின் தீர்த்தக் கேணி இடிக்கப்படும் நடவடிக்கையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பின் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதனை கவனத்திற் கொள்ளாவிடில் திருகோணமலை மாவட்டத்தை முற்றாக முடக்கும் அளவுக்கு பாரிய மக்கள் போராட்டத்தை மேற்கொள்வோம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
திருகோணமலை கண்னியா வெந்நீரூற்று இந்து சமய மக்களின் புனிதமான ஒரு இடம்.
அதனை சில வருடஙக்ளுக்கு முன்னர் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து அங்குள்ள பிள்ளையார் ஆலயம் மற்றும் சிவன் கோவிலுக்கு சொந்தமான கேணி ஆகியவற்றை இடித்து அழிக்கும் பணிகள் துரித கதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அங்கு அத்துமீறி வந்து தங்கியிருக்கும் பௌத்த பிக்கு ஒருவரே செய்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக மக்களிடமிருந்து எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் குறித்த விடயம் தொடா்பாக அரசியல்வாதிகள், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு முறைப்பாடுகளை மக்கள் வழங்கியபோதும் ஒருவரும் இந்த விடயத்தில் தலையிடவில்லை.
அரச அதிபா் சம்பவ இடத்தை பார்ப்பதாக மட்டும் கூறியிருக்கின்றார், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஒரு இடத்தை அரசாங்கம் அறிவிப்பது அந்த இடத்தை பாதுகாப்பதற்கா? அல்லது அங்குள்ள தொல்லியல் முக்கியத்துவமவாய்ந்த பொருட்களை,
கட்டிடங்களை அழிப்பதற்கா? என்பதை அரசாங்க அதிபா், கிழக்கு ஆளுநா், மற்றும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு கூறவேண்டும்.
எனவே உரிய காலத்திற்குள் இந்த அழிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டும். தவறினால் திருகோணமலை மாவட்டத்தை முடக்கும் அளவுக்கு பாரிய மக்கள் போராட்டத்தை நடத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.