இரு வாரங்களில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த எம்மால் முடிந்தது!
எமது நாடு எதிர்கொண்ட திடீர் சர்வதேச பயங்கரவாதத்தை தற்போதைய அரசாங்கத்தினால் சரியான முறையிலே முகம்கொடுத்து கட்டுப்படுத்த முடிந்தது என பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலியத்துறை அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
மனங்களை இனைக்கின்ற “ரண் மாவத்த” வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அரணாயக்க தேர்தல் தொகுதியின் அரணாயக்க கடுகஹ – நாறங்கம்மன வீதியின் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து பேசுகையிலே மேற்கண்டவாறு கூறினார்.
இரண்டு கிழமைகளில் இந்த பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவும், முகாமைத்துவப்படுத்தவும், எமது தாய்நாட்டின் முப்படையினராலும் முடிந்தது.
இன்னும் ஓரிரு கிழமைகளில் பயங்கரவாதத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர எமது ஐ.தே.கட்சி அரசாங்கம் திடசங்கம் பூண்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
மேலும் பேசிய அவர்,
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த அரசாங்கத்தை எமது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பெடுக்கும் போது சங்கிலித் தொடரான பிரச்சினைகளை எதிர் கொண்டது.
கோடிக்கணக்கான கடன் சுமைகள், பொருளாதார தொடர்வீழ்ச்சி, சுற்றுளாத்துறை வீழ்ச்சி, திருட்டு, பொய் இது போன்றன சொல்லோன்னாப் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் மத்தியிலே ஆட்சியை பொறுப்பெடுத்தோம்.
நாம் இவ்வாறான பிரச்சினைகளையும் சவால்களையும் கண்டு பின்வாங்கவில்லை, மிகவும் துல்லியமாகவும், சரியாகவும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்தோம், நாட்டின் வெவ்வேறான பிரதேசங்களில் ஏற்பட்ட கோடை, மழை, வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்த அழிவுகளினால் பாரிய சேதங்கள் ஏற்பட்டன. அதற்கும் நாம் சரியாக முகம்கொடுத்தோம்.
அது போலவே நாட்டில் திடீரென ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புக்கும், 56 நாள் ஆட்சி உள்ளிட்ட எதிர்கட்சியினரின் சவால்களுக்கும் மிகவும் நுட்பமான முறையிலே முகம் கொடுத்து வெற்றிபெற்றோம். அந்த வெற்றியை முழு உலக வாழ் மக்களும் கண்டு கொண்டார்கள்.
அதள பாதாளத்தில் வீழ்ந்திருந்த பொருளாதாரத்தையும், சுற்றுலாத்துறையையும் நாளுக்கு நாள் முன்னோக்கி சரியான பாதைக்கு எடுத்து செல்ல எமது ஐ.தே.கட்சி அரசாங்கத்தால் முடிந்தது.
இன்று எமக்கு மிகவும் சவாலான ஒரு பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது. அதுதான் சர்வதேச பயங்கரவாதம், அதற்கும் அரசாங்கம் என்ற முறையில் மிகவும் துல்லியமாகவும், திறமையாகவும் முகம் கொடுத்தோம்.
எமது பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்த அனைத்து பிரச்சினைகளையும், அனைத்து சவால்களையும் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தவும் அயராது பாடுபட்டு வருகிறார்.
சிலர் எம்மிடம் கேட்கிறார்கள் இந்த அரசாங்கம் என்ன செய்கின்றது என, நாம் ஒன்றைக் கூறவிரும்புகின்றோம்.
இந்த அரசாங்கம் இதுவரை செய்த, செய்து கொண்டு இருக்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள், சேவைகள் பற்றி எம்மிடம் கேட்பவர்களின் இதயத்தைத் தட்டிக் கேழுங்கள்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையின் கீழ் தான் பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி அமைச்சுக்கு மிகவும் கூடுதலான பிரத்தியேக நிதி உதவி தரப்பட்டு அதன் மூலம் நாடு பூராகவும் வீதி அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றிவருகின்றோம்.
இந்த திறப்பு விழாவிலே கேகாலை மாவட்ட பாராளுமன்ற உருப்பிணர் அஜித் பெரேரா அரநாயக்க தொகுதி ஐ.தே.க. அமைப்பாளர் முன்னாள் சுகாதாரப் பிரதி அமைச்சர் லலித் திஸானாயக்க மற்றும் மகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.