மலையகத்தில் கல்வி புரட்சி ஏற்படுத்தப்படும்!
மத்திய மாகாண கல்வி அமைச்சை, வேறு அமைச்சுக்களுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் மலையகத்தில் கல்விப் புரட்சி ஏற்படுத்தப்படும் என்றும் இது கொள்கை ரீதியான விடயம் என்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
ஹட்டனில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“இந்திய- இலங்கை உடன்படிக்கையில் கூட மலையக கல்வியை மேம்படுத்த வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டது.
ஆகவே ரஜிவ்- ஜே.ஆர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட மாகாண சபைகளின் போதே இவ்விடயங்கள் குறித்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மத்திய மாகாண கல்வி அமைச்சை, வேறு அமைச்சுக்களுடன் இணைக்கும் நடவடிக்கையை யாராலும் மேற்கொள்ள முடியாது.
இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய பகுதிகளில் மாகாண சபையுடைய கல்வியமைச்சு அல்லது ஏனைய அமைச்சுகள் தமிழ் மக்களின் கைகளிலேயே உள்ளது.
இதேவேளை மத்திய, ஊவா, சப்ரகமுவ ஆகிய பகுதிகளில் கல்வியமைச்சு தமிழ் மக்களிடம் இல்லாதபோதிலும் தமிழ்மொழி மீதானதொரு அமைச்சை ஏற்படுத்தவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதில் இணைக்கப்பட்டமைதான் இந்த தமிழ் கல்வியமைச்சு. இனமுறுகளோ அல்லது வேறு எந்த நடவடிக்கையையும் நாம் கேட்கவில்லை.
எங்களது கல்வியை மேம்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பத்தையே நாங்கள் கேட்கின்றோம்” என இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.