குருணாகல் வைத்தியருக்கு எதிராக 122 முறைப்பாடுகள்!
வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை தொடர்பில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து சி.ஐ.டி. யினர் தொடர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சொத்து குவிப்பு விவகாரத்தை மையப்படுத்தி இந்த விசாரணைகள் இடம்பெறுவதாகவும், குறித்த வைத்தியருக்கு எதிராக முன்வைக்கப்படும் சட்ட விரோத கருத்தடை குற்றச்சாட்டு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்தடை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி குருணாகல் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.தேரர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் இதன்போது குருணாகல் நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
இதனிடையே வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபி கருத்தடை செய்துள்ளாரா என்பதை பரிசீலிக்குமாறு வலியுறுத்தி நேற்று மாலைவரை 122 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. தம்புள்ளை வைத்தியசலைக்கும், பொலிஸ் நிலையத்துக்கும் 10 முறைப்பாடுகளும் குருணாகல் வைத்தியசாலைக்கு 112 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறித்த வைத்தியசாலைகள் அதிகாரிகள் கூறினர்.
அவற்றில் சுமார் 56 முறைப்பாடுகள் நேற்று கிடைத்ததாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத்வீர பண்டார குறிப்பிட்டார்.
கருத்தடை செய்ததாக முறைப்பாடுகளை முன்வைத்துள்ள தாய்மார்களை விசேட மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியர் சரத்வீர பண்டார குறிப்பிட்டார். இந்த விசேட மருத்துவ சோதனையை விரைவில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க சுகாதார அமைச்சு ஆறு பேர் கொண்ட சிறப்பு குழுவை நியமித்துள்ளது.
சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறு பேர் கொண்ட குழுவில், ஓய்வுபெற்ற பிரசவ மற்றும் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர் லக்ஷ்மன் சேனநாயக்க, பிரசவ மற்றும் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுணர் யூ.டி.பி. ரத்னசிறி, குடும்ப சுகாதார நிறுவனத்தின் சமூக வைத்தியர் சஞ்ஜீவ கொடகந்தகே, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் எல்.ஏ. பஸ்நாயக்க, மற்றும் விசாரணை அதிகாரி எஸ். ஐ. குணவர்தன ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.
வைத்தியர் ஷாபிக்கு எதிராக உள்ள முறைப்பாடுகளை விசாரித்தல், மேற்பார்வை மற்றும் யோசனைகள் அடங்கிய முதற்கட்ட அறிக்கையை ஒரு வாரத்துக்குள்ளும், முழுமையான அறிக்கையை ஒரு மாதத்துக்குள்ளும் இந்த குழு வழங்க வேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா தெரிவித்தார்.
இதனிடையே சுகாதார அமைச்சின் செயலாளருடைய அனுமதி இல்லாமல், தொழில்நுட்பத் தரவுகள் தவிர்ந்த ஏனைய தகவல்களை வெ ளியிடுவதற்கு மருத்துவ நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சைப் பிரிவுகளின் நிர்வாகிகள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த பணிப்புரையை ஏற்று செயற்படாத மருத்துவ நிர்வாகிகளுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் லால் பனாபிட்டிய குறிப்பிட்டார்.