சம்பந்தனுக்கும் மோடிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.
இந்நிலையில் குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெறவுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதன்போது, அண்மையில் நடைபெற்ற தொடர் குண்டுத் தாக்குதல், அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கூட்டமைப்பு மோடியிடம் எடுத்துரைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகைதரவுள்ள மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பல தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.