வடக்கில் பிரபாகரன் ஒருவர் உருவாகி நாட்டை நாசமாக்கியது போல முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கி விடாதீர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் நான்காம் கட்ட நிகழ்வு இன்று முல்லைத்தீவில் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலில் நூற்றுக்கு 80 வீதமான முல்லைத்தீவு மக்கள் எனக்கு வாக்களித்தனர்.
நாட்டை ஆண்ட ஆறு ஜனாதிபதிகளில் நான் தான் கூடுதலாக முல்லைத்தீவிற்கு வந்துள்ளேன்.
முல்லைத்தீவில் வறுமை நிலை உள்ளது. அதனை இல்லாமலாக்க நாம் செயற்பட வேண்டும். இன, மத, குல பேதங்களால் பிரிந்துள்ள நாம், நாட்டை மேம்படுத்த ஒன்றுபட வேண்டும்.
போரில் பலரின் காணி உறுதிகள் அழிந்துள்ளதாக அறிந்தேன். இதனால் வங்கிக்கடன் கூட எடுக்க முடியாத நிலை உள்ளது.
இந்த விடயம் குறித்து அமைச்சரவையில் பேசி நிவாரணம் கொடுப்பேன். நாடு ஒன்றாக இருக்கவேண்டுமானால் மகா சங்கத்தினர் ஒன்றாக இருக்க வேண்டும்.
இதரமத தலைவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பிரிந்து நிற்கிறார்கள். அது கவலைக்குரியது.
தேர்தலை இலக்கு வைத்து செயற்படுகின்றனர். அடிப்படைவாதம் கூடாது. அண்மைய தாக்குதலின் பின் நாட்டு பொருளாதாரம் விழுந்துள்ளது.
உயிரிழப்புக்கள் நடந்தன. பிரிவினை அதிகரித்தது. தீவிரவாதிகள் இலக்கை அடையும் வகையில் செயற்பட்டனர்.
தீவிரவாதிகளின் நோக்கம் மக்களை கொல்வது மட்டுமல்ல. அவர்கள் நினைத்தது தற்போது அடையப்பட்டுள்ளது.
அந்த நோக்கம் ஈடேற இடமளிக்க வேண்டாம். வடக்கில் ஒரு பிரபாகரன் உருவானது போல் முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்க வேண்டாம்.
அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கத்தில் தான். அதை அடைய இடமளிக்க வேண்டாம்.
இனவாதத்தை விதைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று நான் கேட்கிறேன். முல்லைத்தீவில் வனவளம் நன்றாக உள்ளது.
மரம் வெட்டும் மெஷின்களை பதிய வேண்டும் என நான் கோரிய பின் இரு வாரத்திற்குள் 82000 பேர் பதிவு செய்தனர்.
ஆனால் இன்னும் 25000 வரை பதியாமல் உள்ளதாக தெரிகிறது. மரக்காலைகளை புதிதாக பதிய கூடாது என்று நான் கூறினேன்.
இன்று பத்திரிகை பார்த்தேன். அப்படியானால் சவப்பெட்டிகளை எவ்வாறு செய்வர் என்று யாரோ கேட்கின்றனர்.
மரக்காலைகளிலா சவப்பெட்டி செய்கின்றனர்? அது சவச்சாலைகளில் செய்யப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான தயா கமகே, கயந்த கருணாதிலக மற்றும் வடக்கு ஆளுநர் சுரேன் இராகவன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிவமோகன், காதர்மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.