உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியம் பெற புலனாய்வு அதிகாரிகளை அழைக்க இடமளிக்க போவதில்லை என்றும், தெரிவுக்குழுவை உடனடியாக ரத்துச் செய்யுமாறும், பாதுகாப்பு அதிகாரிகள் எவரையும் இனி தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டாமென தாம் உத்தரவிட்டிருப்பதாக வெளியான தகவலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பதலடி கொடுத்துள்ளார்.
நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவசரமாக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது.
இதன்போது, நாடாளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான கருத்துக்களை முன்வைத்ததாகவும், விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு சாட்சியங்கள் மூலம் பாதுகாப்பு தரப்பின் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும் அதேசமயம் தவறுகளை தன் மீது சுமத்த முயல்வதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும், இதனையடுத்து, பேசிய ஜனாதிபதி, இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவானது இரகசிய தகவல் சட்டத்தையும் மீறி செயற்படுகிறது.
புலனாய்வு அதிகாரிகளை தெரிவுக்குழுவிற்கு அழைத்து, ஊடகங்களுக்கு எதிரில் அவர்களிடம் தகவல்களை கேட்பது நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய புலனாய்சு சேவைகளுக்கு பெரிய அச்சுறுத்தலானது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஐந்து மனுக்கள் விசாரிக்கப்பட்டு வரும் வேளையில், தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள், நீதிமன்ற விசாரணைகளுக்கு தடையாக இருப்பதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் அந்த அறிக்கை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
தெரிவுக்குழு இவ்வாறுதான் செயற்படுமாயின், அரசாங்கத்தின் வேலைகளுக்கு உதவ போவதில்லை. ஜனாதிபதி என்ற வகையில் எனது பணிகளை மட்டும் செய்ய போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியம் பெற புலனாய்வு அதிகாரிகளை அழைக்க இடமளிக்க போவதில்லை என்றும், தெரிவுக்குழுவை உடனடியாக ரத்துச் செய்யுமாறும், பாதுகாப்பு அதிகாரிகள் எவரையும் இனி தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டாமென தாம் உத்தரவிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த முடிவு தொடர்பாக இன்று தகவல் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், தெரிவுக்குழுவின் உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்,
நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தீர்மானம் எடுப்பது நாடாளுமன்றத்தின் வேலையேயன்றி, நிறைவேற்று அதிகாரத்தின் வேலை இல்லை. எனக்கு தெரிந்தவரை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.