கட்டுநாயக்காவில் மோடியை வரவேற்பது யார்?
இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்திலிருந்து வரவேற்பது யார் என்ற குழப்பம் அரசியல்மட்டத்தில் ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய அயல்நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். நேற்றைய தினம் மாலைதீவு சென்றிருந்த அவர், இன்று முற்பகல் இலங்கைக்கு வருகிறார்.
இலங்கையில் நான்கு மணித்தியாலங்கள் மட்டுமே அவர் தங்கியிருப்பார் என்றும், இதன்போது அரசியல் தலைவர்கள் பலருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகிருந்தன.
இந்நிலையில் முற்பகல் இலங்கை வரும் அவரை விமான நிலையத்திலிருந்து யார் வரவேற்பது என்பது தொடர்பில் குழப்பம் நிலைவிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இந்தியப் பிரதமரை அமைச்சரவையின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச சென்று வரவேற்கும் பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்ததாக ஜனாதிபதியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பார் என்றும், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் நிகழ்வில் மைத்திரிபால சிறிசேன வரவேற்பார் என்றும் கூறப்பட்டது.
ஆனால், அதன்பின்னர் வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, ஜனாதிபதியே கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று இந்தியப் பிரதமரை வரவேற்பார் என்று பிறிதொரு தகவலும் வெளியாகியிருக்கின்றன.
இது மரபுக்கு மாறான செயல் என்றும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் இந்தியப் பிரதமரை வரவேற்பது யார் என்ற உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையானது அமைந்துள்ள இந்த வேளையில், அவரின் பயணம் தொடர்பான தெளிவான நிகழ்ச்சி நிரல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு குழப்பமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.