ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி முன்னிலையாகவுள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நான்காவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.
இதன்போது தெரிவுக்குழுவில் முன்னிலையாகி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சாட்சியமளிக்கவுள்ளனர்.
அத்தோடு தனது பதவியை இராஜினாமா செய்துள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இதுவரை இடம்பெற்ற அமர்வுகளில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி டி.ஐ.ஜி.சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளன.
ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.