வில்பத்து தேசிய பூங்காவில் கடற்படை முகாமொன்று இருக்கவே இல்லையென கடற்படை பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
எனவே அங்கிருந்த கடற்படை முகாம் அகற்றப்படுவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் காணப்பட்டது கடற்படையின் நலன்புரி சேவைகளுக்காக பயன்படுத்திய 26 ஏக்கர் நிலப்பரப்பாகும் என்றும் இந்த நிலத்தில் தேசிய உணவு உற்பத்தி மற்றும் நஞ்சுத்தன்மையற்ற உணவு பொருட்களை உற்பத்தி செய்தல் போன்ற நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரதேசங்களின் பாதுகாப்பிற்காக சிலாவத்துறை மற்றும் முள்ளகிக்குளம் பகுதிகளில் இரு முகாம்கள் காணப்படுவதாகவும் இந்த முகாம்களினூடாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த முகாம்கள் ஒருபோதும் நீக்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.