இலங்கை போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
அவர்களின் போராட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமது உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 5100 பதவி உயர்வுகளை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக சங்கத்தின் நாராஹேன்பிட்டி தலைமையக செயலாளர் ரஞ்சித் விஜேசிறி தெரிவித்துள்ளார்.
சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இரு நாட்களாக சிறிகொத்தவில் சுமார் 2000 ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்த போதிலும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
தமது கோரிக்கைகள் குறித்து அமைச்சர்கள் பலருடன் கலந்துரையாடிய போதிலும் தீர்வு கிட்டவில்லை எனவும் ரஞ்சித் விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பு குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் உபாலி மாரசிங்ககூறியுள்ளார்.
ஊழியர்களை வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.