பொசன் உற்சவத்தை முன்னிட்டு அநுராதபுரத்தில் 8000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தப்படவுள்ளதாக அநுராதபுரம் வலய பொலிஸ்அத்தியட்சகர் திலினஹேவா பத்திரன தெரிவித்தார்.
பொசன் உற்சவத்தை முன்னிட்டு அநுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொசன் உற்சவத்தை முன்னிட்டு அநுராதபுரம் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வலயங்களின் பாதுகாப்புக்காக 4000 பொலிஸாரும் 2000 இராணுவ வீரர்களும் 1000 சிவில் பாதுகாப்பு படையினரும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், கடற்படையினர் என மொத்தம் 8ஆயிரம் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக்கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அநுராதபுரம் புனித பூமி மற்றும் குட்டம் பொகுண ஆகிய பகுதி ஒரு வலயமாகவும் மிஹிந்தலை உள்ளிட்ட புனித பூமி ஒரு வலயமாகவும் அவ்கன விஜிதபுர பகுதி ஒரு வலயமாகவும் தந்திரிமலை ரஜமஹா விகாரை உள்ளிட்ட புனித பூமி ஒரு வலயமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் விசேட வீதிச்சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பொசன் உற்சவத்தை முன்னிட்டு அநுராதபுரத்துக்கு வரும் பக்தர்கள் வழிபாட்டுக்கு தேவையான பொருட்களை மாத்திரம் எடுத்துவரவேண்டும்.
முக்கியமாக குளங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் குளிக்கும் இடங்களுக்கு பொலிஸ் உயிர் பாதுகாப்புபிரிவு உத்தியோகத்தர்களும் கடற்படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்நிலையில் குளிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மாத்திரமே பொதுமக்கள் குளிக்க வேண்டும். பொசன் வலயங்களில் தாபிக்கப்பட்டுள்ள வாகனத்தரிப்பிடங்களில் மாத்திரமே வாகனங்களை நிறுத்த முடியும்.
ஏனைய இடங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசல்களை ஏற்படுத்தும் வாகன சாரதிகளுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.