சிறிலங்காவில் இன்று நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் உருவாகப்போகும் ஆட்சியானது அடுத்து ஒரு தசாப்த காலத்துக்கு அந்த நாடு எவ்வாறு உருப்படப்போகிறது என்பதற்கு பதில் சொல்லப்போகிறது. இந்த தேர்தலின் பின்னணியில் இருக்கின்ற விநோதமான உண்மைகளையும் சமன்பாடுகளையும் அரசியல்வாதிகள் புரிந்துவைத்திருக்கிறார்களே இல்லையோ இனிமேல் மக்கள் புரிந்துகொண்டால்தான், கைக்காசு மிஞ்சுமளவுக்காவது பிரயோசனம் வந்து சேரும்.
1) கோத்தபாய தரப்பு இந்தத்தேர்தலில் தோல்வியடைந்தால், மகிந்த தரப்புக்கு கிடைக்கப்போகும் hat-trick தோல்வியாக இது அமையும். ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலிலும் தோற்று – குறுக்கு ஒழுங்கை வழியாக வந்து பிரதமர் பதவியை முழுங்கப்பார்த்த அந்த முயற்சியும் தோல்வியுற்று, கடைசியில் இந்த தேர்தலிலும் தோல்வியுற்றால் – அது அவர்களுக்கு சகடை போட்ட குண்டுபோலத்தானிருக்கும்.
அவர்களுக்கு முன்னர் ஏற்பட்ட இரண்டு தோல்விகளும் சிறுபான்மையினரால்தான் ஏற்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினர் மைத்திரிக்கு வாக்களித்து காரியத்தை சாதித்தனர். பிரதமர் பதவி விகாரத்திலும் தமிழ் – மூஸ்லிம் எம்பிக்களை எவ்வளவு கிளப்புவதற்கு பார்த்தும் முடியாது போன விஷயமாக மகிந்த தரப்பு தோற்றுப்போனது. ஆகவேதான், இன்றைய தேர்தலில் மகிந்த தரப்பு தங்களுக்கு கிடைக்க முடியாது என்று கருதும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை இயன்றளவு சிதறடிப்பதற்கு வழிபார்த்துவிட்டு, சிங்கள மக்களிடம் ஒட்டுமொத்தமாக காலில் விழுந்திருக்கிறது.
ஆக, சிறுபான்மையின மக்கள் இன்றைய தேர்தலை பார்க்கவேண்டிய வியூகம் எப்படியிருக்கும் என்றால், சஜித்தை பயன்படுத்தி கோத்தாவுக்கு விழக்கூடிய சிங்கள வாக்குகளை பதிலுக்கு சிதறடித்து, வெற்றியை தமக்காக்கிக்கொள்ளவேண்டும். இதன் மூலம் சஜித்தை ஆட்சிக்கு கொண்டுவரவேண்டும். இதனைத்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் செய்திருக்கிறது. ஏனெனில், சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் தேர்தல்கள், யாரைக்கொண்டுவருவது குறித்தானது அல்ல. யாரைக்கொண்டுவரக்கூடாது என்பது குறித்த அடிப்படையிலேயே இருக்கவேண்டும். இது சிறிலங்காவில் மாத்திரமல்ல, உலகெங்கிலுமுள்ள அரசியல் தத்துவம். அதனைச்செய்வதற்கு முதலில் தேர்தலில் பங்குகொள்ளவேண்டும்.
2) 2015 ஆம் ஆண்டு தமது கை விழுந்துபோனதிலிருந்து தொடர்ச்சியாக தமது யுத்தவெற்றி வாதத்தை மூலனமாக வைத்து அரசியல் செய்துகொண்டுவருபவர்கள் மகிந்த தரப்பு. கடந்த நான்கு வருடங்களாக அவர்கள் ஓயவே இல்லை. ஐக்கிய தேசிய கட்சி போலவோ சிறுபான்மை கட்சிகளைப்போலவோ சாக்கு கட்டிலில் படுத்துக்கிடந்துவிட்டு அவ்வப்போது எழுந்தோடிச்சென்று அரசியல் செய்யவில்லை. ஓயாது தங்களை இந்த ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு பணி செய்தவர்கள். அவர்கள் எல்லா கணக்குகளும் சரியா அமைந்தால், இன்று அவர்களது வெற்றி உறுதிப்படுத்தப்படுமானால், அது அவர்களது முயற்சிக்கு கிடைத்த வெற்றியென்றுவிட்டு, புட்டத்தை தட்டிவிட்டு போகவேண்டியதுதான். ஏனெனில், அவர்களை எந்த வகையிலும் விமர்சிக்கும் வகையில் இலங்கையின் எந்த அரசியல் தரப்பும் வேலை செய்யவில்லை. அரசியில் அணிகள்தான் முக்கியமே திவிர, ஆட்கள் அல்ல. அதனை சரியாக புரிந்து வேலை செய்தவர்கள் மகிந்த தரப்பினர்.
3) 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர், இலங்கை நாடாளுமன்ற அரசியலுக்குள் சென்றுவிட்ட, தமிழரின் அரசியலானது அதன் உறுதிப்பாட்டுடன் இணைந்து பயணிக்கவேண்டிய நிலையிலேயே உள்ளது. கொழும்பை குழப்பி அந்த குட்டையில் எமக்குத்தேவையான மீனைப்பிடிக்கலாம் என்ற காலமெல்லாம் போய்விட்டது. குழப்பிவிட்டு, பிடிப்பதற்கு இப்போது எங்களிடம் “கொக்கியே” இல்லை. வந்தது விக்கி மாத்திரம்தான். அதுவும், ஏதேதோ பேசிக்கொண்டு முக்கியபடியுள்ளது.
ஆக, கொழும்பு அரசியல் எவ்வளவுக்கு எவ்வளவு ஸ்திரமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவுதான் தமிழருக்கு எதையாவது பெற்றுக்கொள்ளலாம். அதற்காககத்தான், இவ்வளவு காலமும் தொடர்ந்தும் மத்தியிலுள்ள அரசு விழுந்துவிடாமல் முட்டுக்கொடுப்பது மாத்திரமல்லாமல், விரும்பிய அரசினைக்கொண்டு வருவதற்கும் முயற்சிகளையும் செய்துகொண்டேயிருக்கிறது தமிழ் கூட்டமைப்பு. இந்த தடவை தேர்தலிலும் அதனைத்தான் செய்திருக்கிறது. ஆனால், அதற்காக சம்பந்தரின் வேட்டியை உருவுவதிலேயே குறியாக நிற்கின்ற கஜேந்திரகுமார், சிவாஜிலிங்கம், விக்கி தரப்பெல்லாம், ஒட்டுமொத்த தமிழ் மக்களையே அம்மணமாக்கிவிட்டு, அந்த வேட்டியில் கோத்தபாயவுக்கு தலைப்பாகை கட்டுவதற்கு வெறிபிடித்து நிற்கும் அழகைப்பார்க்கும்போது, காறி உமிழவேண்டும் போலிருக்கிறது.
4) ஆனால், சம்பந்தரைப்பொறுத்தவரை, கஜே – விக்கி – சிவாஜி வகையாறாக்கள் போடுகின்ற குதியோட்டத்தையும் நல்ல காரியமாகவே பார்க்கிறார். ஏனென்றால், இந்த தேர்தலில் மாத்திரமல்ல எந்த தேர்தலிலும் எல்லா தமிழ் கட்சிகளும் ஓரணியில் நின்றால், அது சிங்கள மக்களுக்கு மிகப்பெரியதொரு அச்சுறுத்தலாக அமைந்திருக்கும். அந்த தமிழர் ஒற்றுமையை காண்பித்து, “பார்த்தீர்களாக மக்களே” என்று சிங்கள மக்களை நோக்கி விழித்து, கோத்தா தரப்பு, எப்போதுமே தமிழரை அச்சுறுத்தல்மிக்கதொரு சக்தியாக சிங்கள மக்கள் மத்தியில் கட்டியமைத்திருப்பர். இப்போதைக்கு, சிங்கள மக்கள் மத்தியிலிருக்கும் தமிழர் தொடர்பான ஒரேயொரு திருப்தியான விடயம் என்றால், அது “தமிழர்கள் ஒற்றுமையில்லாதவர்கள்” – என்பது மாத்திரமே. ஆக, அதையே வைத்து சம்பந்தரும் அரசியலை செய்திருக்கிறார். ஏனென்றால், சம்பந்தருக்கு நன்றாகவே தெரியும். தமிழர்களின் மத்தியில் காமடியன்கள் போடுகின்ற குதியோட்டத்தை தமிழர்கள் ஒருபோதும் கணக்கெடுப்பதில்லை என்று. விக்கியும் கஜேயும் தொன்றுதொட்டு இன்றுவரைக்கும் போடுகின்ற எல்லா ஆட்டங்களையும் சம்பந்தர் கண்களை மூடிக்கொண்டே ரசிப்பதற்கு காரணமும் இதுதான்.
ஒற்றுமை என்பது ஒரு கலைச்சொல். அவ்வளவுதான். அதற்கு அரசியில் உள்ள அர்த்தமே வேறு. அதனை தமிழர்களின் மத்தியில் புரிந்துகொண்டவர்களில் சம்பந்தர் தலைமையானவர்.
இவற்றின் பின்னணியில் இன்று நடைபெறப்போகும் வெட்டாட்டத்தை பார்ப்போம்!
ப. தெய்வீகன்