மாவீரர் நாள் நவீன வரலாற்றில் தமக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு பண்பாட்டு நாள்.குணா கவியழகன்

மாவீரர் நாள் நவீன வரலாற்றில் தமக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு பண்பாட்டு நாள் . வீரத்தையும் பிறர் வாழ்வுக்காக தம் உயிர்கொடுத்தவர்களின் அர்ப்பணத்தையும் போற்றித் துதிக்கின்ற உயர் பண்பாட்டு நாளாக இந்த நாள் உருப்பெற்று நிற்கிறது. அர்ப்பணத்தை மகோன்னதப் படுத்துகின்ற மானுடப் பண்பாடாக அறிமுகமாகி நிற்கிறது. தமிழரின் விடுதலை அரசியல் பாதையில் உயிர் ஈகம் செய்தவர்களை இருளில் ஒளியேந்தி வணங்குகிறோம். அவர்களின் அர்ப்பணத்தை இருள் சூழ்ந்த எம் இன வாழ்வுக்கான ஒளியாக கொள்கிறோம். மாவீரத்திற்கும் மகா தியாகத்திற்கும் உரித்தான நாளாக இந்நாளை மகிமைப் படுத்தி, எமது மனப் பண்பாட்டையும் உயர்த்திப் பிடிக்கின்றோம். கால நதியில் கரைந்திடாது இந்நாளையும் இப்பண்பாட்டையும் காப்போம் என உறுதிகொள்கிறோம். அது எமக்கு ஒளியாகும் என்று நம்பிக்கையும் கொள்கிறோம்

மாவீரர்களுக்கு உறவுடையோரே, உற்றவர்களே, உரித்துடையோரே !

உங்கள் தீரா துயரமும், உறவிழந்து நிற்கும் உங்கள் வாழ்வின் துயர்ப் பாடுகளும் இழைக்கப்பட்ட வஞ்சக அரசியல் குறித்து நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் தைக்கிறது; இரத்தக் கண்ணீரையே தந்து நிற்கிறது. மாவீரர்களை நெஞ்சில் சுமக்கும் அதே நேரம், உங்களை எம் தலையில் சுமக்க வேண்டும். அது ஒன்றே தக்க செயல். அதுவே தர்மமும் அறமுமாகும். அந்த அறத்தை ஏந்தியவர்களோ வாழ்வின் கடை நிலையில் காவல் வைக்கப்பட்டிருகிறார்கள். அந்த அறம் அறியாதவர்கள் முடி சூடப்பட்டிருகிறார்கள். செய்வதற்கு ஏதுமின்றி வல்லமை பறிக்கப்பட்ட எம் கரங்களை உம்முன் கூப்பி நிற்கத்தான் முடிகிறது. எம் தலைகளை உங்கள் முன் குனிந்து கொள்கிறோம். தயவுடன் எங்கள் வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இந்த வணக்க நாள் உங்கள் வாழ்வுக்கும் மதிப்பளிகின்ற மகா திருநாளே. காலச் சக்கரம் ஒருபோதும் தரித்து நிற்பதில்லை. ஒருநாள் அது எங்கள் திசை நோக்கி தன் சுழற்சியை தொடங்கலாம். உங்களுக்காய் ஒரு நல் விதியை இயற்ற கால வெளி தன் கதவுகளைத் திறக்காலாம். அப்போது எம் கடமைகளை நிறைவேற்ற காத்திருக்கிறோம்.

அன்புள்ளவர்களே !
விடுதலை என்பது அடையப் பெறும்வரை நடை போடவேண்டிய காலப்பயணம். விடுதலையை அவாவுதலே அந்த பயணத்திற்கான ஆன்ம பலம். அது ஒன்றே சுதந்திரத்திற்கான இயங்கு சக்தி. அந்த ஆன்ம பலத்தை, அந்த இயங்கு சக்தியை கொண்டு காலப் பயணம் செய்யாத எந்தத் தேசமும், எந்த மக்கள் சமூகமும் விடுதலை பெற்றதாய் உலக சரித்திரம் பதிவு செய்யவில்லை. சரித்திரத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டுதான் இந்த மானுட வரலாறு முன்னேறிவந்திருக்கிறது. தேசங்களுக்கும் மக்கள் சமூகங்களுக்கும் அதுதான் விதி. இந்த இயங்கு விதிக்கு விலக்கானது என்று சரித்திரத்தில் எதனையும் காண முடியவில்லை. விடுதலையை அவாவுதல் என்ற சுதந்திரத்திற்கான இந்த இயங்கு விதியைக் கடைபிடிக்காத எந்த மக்கள் சமூகமும் அதை அடைந்துவிட முடியாது. அதற்கான தகுதியையும் பெற்றுவிட முடியாது.

இன்று தமிழர்கள் அறுபதாண்டு காலம் முன்னெடுத்து வந்த விடுதலை அரசியல் பாதையில் தலைமைத்துவங்கள் தடுமாறி நிற்கின்றன; தளம்பி நிற்கின்றன. விடுதலை அரசியல் என்ற பயணத்தில், தம் காலத்துப் பாதையை மாயை அகற்றி உரித்துணர்ந்து பயணம் தொடரவில்லை. மக்களுக்கு வழிகாட்ட அவை தம்மைத் தகுதிப் படுத்துக் கொள்ளவுமில்லை. அறிவும் அர்ப்பணமும் அறமும் தலைமைத்துவத்திற்கு அவசியமான ஒழுக்கப் பண்புகள். இந்த உயரிய ஒழுக்கப் பண்புகளற்ற எந்த மனிதனாலும் மக்களின் விடுதலைக்கு தலைமை தாங்க முடியாது. தக்க அரசியல் இயக்கத்தை கட்டிவளர்க்கவும் முடியாது. அறிவு அர்ப்பணம் அறம் என்ற ஒழுக்கத் தகுதியற்ற எந்த அரசியல் அமைப்பாலும் மக்களுக்காக மக்களுடைய நல்வாழ்வை பெற்றுத்தந்துவிடவும் முடியாது. அடிப்படையில் அவை மக்களால் மக்களிடமிருந்து கொண்டுவரப்பட்ட தலைமைத்துவமாகவும் இருக்க நியாயம் இல்லை. இவை இறக்குமதி சனநாயக நாசகரப் பொறிமுறையால் மக்களுக்கு தருவிக்கப்பட்ட தலைமைத்துவமாகவே இருக்க முடியும்.

ஒரு காலம் ஐரோப்பாவில் உருவாகிய பேரரசுகள் எங்கள் ஆதிபத்தியத்தையும் அரசுரிமையையும் விழுங்கிக் கொண்டன. அவை தமக்கு இசைவான அரசியல்படி புதிய இறைமை எல்லைகளை உருவாக்கின. இறுதியாக ஆண்ட பிரித்தானிய பேரரசு தமிழர்களின் இறைமை உரிமையை தமது புவிசார் நலனுக்கு இசைவான தரப்புகளிடம் கையளித்து நவகாலனித்துவ முறைமைக்குள் புகுந்து கொண்டது. இந்த அரசுரிமைமையை பெற்றுக்கொண்டவர்கள் தமிழ் மக்களின் கூட்டு உரிமையையும் கூட்டு வாழ்வையும் கருவறுக்கும் நாசகார அரசியலை முன்னெடுத்தனர். இதனால் பலியானது இலங்கைத் தீவின் தமிழ்மக்கள் மட்டுமல்ல, அனைத்து மக்கள் சமூகமும் தான். சிங்கள பெரும்பான்மை மக்கள் இதை கண்டுணர தவறினர். மேற்குலக தலைமை கொண்ட புதிய நவ தாராளவாத அரசியல் போக்கிலும் இதுதான் தொடர்ந்தது; இன்னும் தொடர்கிறது.
அன்று இந்த விதியிலிருந்து நசுக்கப்படும் தமிழ் மக்களின் சுதந்திரம் வேண்டி தந்தை செல்வா விடுதலை அரசியலை முன்னெடுத்தார். அகிம்சைப் போராட்டத்தை விடுதலை அரசியலுக்கான வழிமுறையாக வகுத்துக்கொண்டார். தமிழ் பேசும் மக்கள் இந்த விடுதலை அரசியலின் பின்னால் அணிதிரண்டனர். அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால், அது அரச வன்முறையால் தோற்கடிக்கப்பட்டது. அகிம்சை என்பது இந்த அநாகரிக இறக்குமதி சனனாயக முறையில் மதிக்கபடாது போனபோது அது காலாவதியாகிப்போன முறைமை என்பது புரிந்துகொள்ளப்பட்டது.

பின், தலைவர் பிரபாகரன் அப்போதைய உலகப் புறநிலையில் செல்லுபடியான விடுதலை அரசியலாக ஆயுதப் போராட்ட முறைமையை முன் வைத்தார். விடுதலை அரசியலின் காலப்பயணம் ஆயுதப் போராட்டத்தின் வழியே முன்னேறியது. மக்கள் அணிதிரண்டு போராடினர். அளப்பெரிய ஈகங்களைப் புரிந்து முன்னேறினர். முடிவாக பெரும் வெற்றியை ஈட்டி இலங்கை அரசை செயலிழக்க வைத்தனர். இந்த பூமி பந்தில் தமிழர்க்கு இத்தீவில் ஒரு நாடு உருவாகுவதையோ அல்லது சமத்துவ உரிமையோடு சமாதான வாழ்வோடு இலங்கை என்ற நாடு முன்னேறுவதையோ தமது நலனுக்கு எதிராகக் கண்ட சக்திகள் கூட்டாக சதிசெய்து தமிழரின் ஆயுதப் போராட்ட சக்தியை அழித்தன.

உலகின் பெரும் சக்திகளும் அவற்றின் உயர் இராணுவ தொழில் நுட்பமும் இந்த போரில் பங்கெடுத்தன. பெரும் மக்கள் அழிவின் மூலம் இந்த தீவின் அரசியலில் தலையிட்டு தமது வல்லாதிக்கப் போட்டிக்கு பயன்படுத்தத் திட்டமிட்டன. இத்தீவில் என்றைக்குமாக நிலைகொள்ள அவை இரகசிய திட்டத்தை வகுத்தன. இந்த நாசகார அரசியலை துரதிஷ்டமாக சிங்கள தலைமைத்துவம் புரிந்துகொள்ள தவறியது. விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைமையும் இந்த நாசகார அரசியலுக்கு பலியாகி, இலங்கை வாழ் அனைத்து மக்கள் சமூகத்தின் வாழ்வையும் எதிர்காலத்தையும் பாழாக்கும் தீர்மானத்தை எடுக்க விரும்பவில்லை.

உலக சக்திகளின் அரசியல் சதுரங்க ஆட்டத்தில் விடுதலைப் புலிகளின் கையில் இரண்டு தெரிவுகள்தான் மீதமிருந்தன. ஒன்று புலிகள் இயக்கத்தை காத்து அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படுவது. மற்றையது இலங்கை என்ற நாட்டின் எதிர்காலத்தை காத்து அவர்களின் நிகழ்ச்சி நிரலை தவிர்ப்பது. ஒரு விடுதலை அரசியலை முன்னெடுக்கும் அமைப்பின் அறம் என்ற வகையில் இரண்டாவது தீர்மானத்தையே விடுதலைப் புலிகள் இயக்கம் எடுத்துக் கொண்டது. இலங்கைத் தீவின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிட்டு தமிழர்களின் உரிமையையோ வாழ்வையோ கண்டெடுக்க முடியாது. அது அறத்திற்கு அப்பாற்பட்டது. அரசியல் அயோக்கியத்தனமானது. இலங்கயின் அனைத்து குடிமக்களுக்கும் ஆபத்தானது. இதுதான் புலிகளின் நிலைப்பாடாக இருந்தது. அவர்களோடு ஒத்துழைக்காத இந்த நிலைப்பாட்டின் விளைவாகவே தமிழரின் ஆயுதப் போராட்ட சக்தி அடியோடு அழிக்கப்பட்டது. ஆயினும் இலங்கை வாழ் அனைத்து மக்கள் சமூகத்தின் எதிர்காலத்திற்கும் நிகழ இருந்த அழிவு காக்கப்பட்டது. இதுதான் கடந்தகாலத்தின் மெய். இதுதான் சத்தியம்.

இந்த சத்தியத்தை இலங்கையின் மக்கள் சமூகங்கள் இன்னும் கண்டுணரவில்லை. அதை கண்டுபிடித்து சொல்ல புலமையாளர்களும் தலைவர்களும் தயாராக இல்லை. அந்த புலமையும் அவர்களிடம் இல்லை. அந்த நேர்மையும் இல்லை. அவர்கள் இனவாதம் என்னும் மனச்சிக்கை அறுத்து வெளிவர முடியாதவர்களாய் இருக்கிறார்கள். அதனால் இந்த நாட்டின் அரசியல் எவருக்கோ சேவகம் செய்யும் துர்விதியை கொண்டிருக்கிறது.

என்றோ ஒரு நாள் வரலாறு இந்த சத்தியத்தை மீட்டெடுக்கும். இலங்கையின் மக்கள் சமூகங்கள் உண்மை உணர்ந்து விழித்துக் கொள்ளும். வரலாறு உலக அரசியலை ஒரே போன்று வைத்திருப்பதில்லை. அதுவரை தமிழினம் சிங்கள பேரினவாத அரசியலில் பலியாகாது தம்மை தற்காத்துக் கொள்ளவேண்டும். விடுதலையை அவாவுதல் என்ற ஆன்ம சக்தியை சமத்துவம் , சகோதரத்துவம் மற்றும் சுதந்திரத்திற்காக கொண்டிருக்கவேண்டும். காலாவதியாக்கப்பட்ட ஆயுத போராட்ட அரசியலுக்கு பின்னான காலத்தை, இதுவரையான விடுதலை அரசியலிலிருந்து வழுவாது வழிநடத்த புதிய பாதையை, புதிய முறைமையை வகுக்க வேண்டும். அதற்கு தகுதியான தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும்.

விடுதலை எனும் காலப்பயணத்தில் அதுவரையான இந்த தளர்ச்சியைக் கடக்க மாவீரரின் அர்ப்பணத்தை நெஞ்சில் இருத்திக் கொள்வோம். அர்ப்பணத்தை மகோன்னதவப் படுத்தும் இந்தப் பண்பாட்டை கட்டிக் காப்போம். ஒளிமயமான இத்தீவின் எதிர்காலத்தையும் இன்று ஏந்துகின்ற ஒளிகொண்டு காண்போம்.

இவ்வண்ணம்
குணா கவியழகன்
எழுத்தாளர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net