பெரும் பொலீஸ் நடவடிக்கை மூலம்
3,000 வெளிநாட்டு குடியேற்றவாசிகள்
கூடாரங்களில் இருந்து வெளியேற்றம்
பாரிஸின் நுழைவாயிலான ஸ்ரட் து பிரான்ஸ்(Stade de France) பகுதியில் தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்த குடியேற்றவாசிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
தனியாட்களாகவும் குடும்பங்களாகவும் தங்கி வாழ்ந்த சுமார் மூவாயிரம் பேரை அங்கிருந்து வெளியேற்றும் பெரும் பொலீஸ் நடவடிக்கை நேற்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்டது.
குடியேறிகளில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் ஆவர். நீண்டகாலமாக வீதியோரங்களிலும் ஒதுக்குப்புறமான இடங்களிலும் தற்காலிக கூடாரங்களை நிறுவி அவற்றில் சுகாதார வசதிகள் ஏதுமற்ற சூழ்நிலையில் தங்கிவாழ்ந்து வந்தனர்.
நேற்று அதிகாலை 4 மணி முதல் பெரும் எண்ணிக்கையான பொலீஸ் படையினர் அப்பகுதிகளைச் சுற்றிவளைத்து அங்கிருந்து எவரும் வெளியேறுவதை தடைசெய்தனர்.
பொலீஸார் தங்களை வெளியேற்றப் போவதை அறிந்த குடியேறிகள் தாங்கள் கைவிட்டுச் செல்லும் உடைமைகளைத் தீ வைத்து எரிக்க முட்பட்டனர்.இதனால் அப்பகுதிகளில் பெரும் புகைமண்டலம் பரவியது. தீயணைப்புப் பிரிவினர் விரைந்து வந்து நிலைமையைக் கண்காணித்தனர்.
சுமார் 400 குடும்பங்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் தயாராக நின்றிருந்த அறுபதுக்கும் மேற்பட்ட பஸ்களில் ஏற்றப்பட்டு முதலில் சுகாதாரப் பகுதியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைரஸ் சோதனை நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நடத்தப்பட்ட வைரஸ் பரிசோதனையின் பிறகு அனைவரும் இல் தூ பிரான்ஸ் பிராந்தியத்தின் பல பகுதிகளில் உள்ளக விளையாட்டரங்குகளில் நிறுவப்பட்ட தற்காலிக வதிவிடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
பாரிஸ் பொலீஸ் தலைமையகமும் பிராந்திய பொலீஸ் பிரிவும் இணைந்து மேற்கொண்ட இந்தப் பெரும் வெளியேற்ற நடவடிக்கையை மனிதநேயப் பணியாளர்களும் மருத்துவர்களும் கண்காணித்தனர்.
பிரதி இணையம்