மக்களின் உள ஆரோக்கியம் மிக மோசம்
தினசரி 20 ஆயிரம் அவசர அழைப்புகள்.
தொற்று நோய்ச் சூழ்நிலையும் அதனோடு தொடர்புடைய வாழ்வு முடக்கங்களும் பிரெஞ்சு மக்களது உள ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதித்திருக்கின்றன.
கடந்த ஏப்ரல் முதல் சுமார் இரண்டு மில்லியன் பேர் உளநலப் பதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். எட்டாயிரம் பேர் மனநல மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தினசரி 20 ஆயிரம் பேர் வரை மனப்பாதிப்புக்கான உதவி கேட்டு அவசர இலக்கங்களோடு தொடர்பு கொள்கின்றனர்.
தற்சமயம் அமுலில் உள்ள இரண்டாவது பொது முடக்க காலப்பகுதியில் பலரிடமும் ஒருவித “பயப் பதற்றம்” அதிகரித்துள்ளது.
வாராந்த சுகாதார நிலைவரம் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக சுகாதார அமைச்சர் Olivier Véran இன்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இந்த விவரங்களை வெளியிட்டார்.
“தொற்று நோயின் ஓர் உண்மையான விளைவாக மனநலப் பாதிப்பு (psychological impact) மிக அதிகளவில் உருவெடுக்கிறது” என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“சோர்வு, நலமில்லா உணர்வு, பதற்றம்,பயம், மன அழுத்தம், தனிமை (fed up, ill-being, anxiety, depression) எனப் பல விதங்களில் மனரீதியில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்”
நோய் தொற்றி விடும் என்ற பயம், மரணத்துக்கு நெருக்கமான உணர்வு, சமூக இடைவெளியின் பின் விளைவு, அல்லது தொழில் இழப்பு பற்றிய அச்சம் இவை போன்ற ஏதேனும் ஒன்றினால் பலரும் மனப்பாதிப்புக்கு உள்ளாகின்றனர் – என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை –
தற்போதைய கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது நாட்டை மூன்றாவது பொது முடக்கம் ஒன்றுக்கு இட்டுச் சென்றுவிடும் என்பதை அரசு உணர்ந்துள்ளது. எனவே அடுத்து வரும் வாரங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படவேண்டும் என்பதையே அதிபர் மக்ரோன் அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் நத்தார், புதுவருட பண்டிகைக் காலப்பகுதியை ஒட்டி கட்டுப்பாடின்றி நடமாடும் அனுமதியும் ஒன்று கூடலும் சற்று ஆறுதலும் கிடைக்கும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொது முடக்கத்தில் இருந்து விடுபடும் விதமான முக்கிய அறிவுப்புகள் எதுவும் அடுத்தவாரம் நடுப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் அதிபரின் தொலைக்காட்சி உரையில் இடம்பெற வாய்ப்பில்லை என்று எலிஸே மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரதி இணையம்.