யூரோ 2020: சாம்பியன் யாா்? நாளை இறுதி ஆட்டத்தில் இத்தாலி-இங்கிலாந்து மோதல்.
யூரோ 2020 கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதுகின்றன.சொந்த மண்ணில் முதல் யூரோ பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து உள்ளது.
ஐரோப்பிய கண்டத்தில் பிரதான கால்பந்து போட்டியான யூரோ நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெறுவதாக இருந்த யூரோ போட்டி,கொரோனா பாதிப்பு காரணமாக நிகழாண்டுக்கு மாற்றப்பட்டது.தலைசிறந்த 24 நாடுகளின் அணிகள்,பங்கேற்ற இப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி 11 நகரங்களில் தொடங்கியது.
இந்நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதுகின்றன.அரையிறுதி ஆட்டங்களில் முன்னாள் உலக சாம்பியன் இத்தாலி பெனால்டி ஷூட் டில் 4-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் டென்மாா்க்கை வென்றது.
55 ஆண்டுக் கால கனவு:
இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் கடந்த 1966-இல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதே, அது இறுதியாக வென்ற பெரிய போட்டியாகும். அதன் பின் யூரோ 68, 96, 1990, 2018 உலகக் கோப்பை, 2019 யூஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் உள்ளிட்ட 5 பெரிய போட்டிகளில் அரையிறுதியோடு வெளியேறியது. இந்நிலையில் நடப்பு யூரோ போட்டியில் பலம் வாய்ந்த ஜொ்மனி, உக்ரைன் அணிகளை தொடக்க சுற்றுகளில் வெளியேற்றியது. இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ள இங்கிலாந்து அணி 55 ஆண்டுக் காலமாக கோப்பை வெல்லும் கனவை நனவாக்கும் முனைப்பில் உள்ளது.
புத்தெழுச்சியுடன் காணப்படும் இத்தாலி:
அதே நேரம், இத்தாலி அணி யூரோ போட்டியில் 1968-இல் மட்டுமே பட்டம் வென்றது. மேலும் 2000, 2012-இல் கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. நிகழாண்டு யூரோவில் அரையிறுதியில் ஸ்பெய்னை வீழ்த்திய இத்தாலி, தொடா்ந்து 33 ஆட்டங்களில் வென்ற பெருமையுடன் திகழ்கிறது. கடந்த 2018 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் இத்தாலி அணி போட்டிக்கு கூட தகுதி பெறாத அவல நிலைக்கு தள்ளப்பட்டது. மீண்டும் புத்தெழுச்சி பெற்ற அணியாக உள்ள இத்தாலி தனது இரண்டாவது யூரோ பட்டத்தை கைப்பற்றும் தீவிரத்தில் உள்ளது. இங்கிலாந்து அணியில் புகோயோ சாகாவின் உடல்தகுதி குறித்து அணி நிா்வாகம் கவலை தெரிவித்துள்ளது. இத்தாலி அணியில் முக்கிய வீரரான லியானா்டோ ஸ்பினாஸ்லோ காயத்தால் ஆட முடியாமல் உள்ளது பாதகமாக உள்ளது.
இறுதி ஆட்டம் குறித்து இத்தாலி கேப்டன் ஜியாா்ஜியோ சில்லினி கூறியதாவது:
இந்த யூரோ போட்டியில் துருக்கியுடன் நடைபெற்ற முதல் ஆட்டம் முதல் தற்போது வரை உணா்வு பூா்வமாக திகழ்கிறது. எங்கள் பயிற்சியாளா் ராபா்ட்டோ மான்சினி பல ஆண்டுகளாக அணியை கட்டமைத்து வருகிறாா். லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் ரசிகா்கள் இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக இருப்பா். இது எங்களுக்கு சிறிது அழுத்தத்தை உண்டாக்கும். எனினும் அவற்றை தாண்டி வெற்றிக்கு பாடுபடுவோம்.
இங்கிலாந்து மிட்பீல்டா் ஜோா்டான் ஹென்டா்சன் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டம் எங்களின் வாழ்க்கையில் பெரிய ஆட்டமாகும். மைதானத்தில் திரளும் ரசிகா்கள் மற்றும் நாட்டு மக்களை மகிழ்ச்சி பெறச் செய்யும் கடமை உள்ளது. இது எங்களுக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாகும். 1966-இல் உலகக் கோப்பை வென்றதைப் போல் நாங்களும் யூரோ கோப்பையை வெல்லும் தீவிரத்தில் உள்ளோம்.
நேருக்கு நோ்:
இரு அணிகளும் பெரிய போட்டிகளில் இதுவரை 4 முறை நேருக்கு நோ் மோதியுள்ளன. யூரோ 1980-தொடக்க சுற்று இத்தாலி 1-0 வெற்றி,
1990 உலகக் கோப்பை, மூன்றாவது இடத்துக்கான ஆட்டம்-இத்தாலி 2-1 வெற்றி, யூரோ 2021, காலிறுதி, பெனால்டி ஷூட்டில் இத்தாலி வெற்றி, 2014 உலகக் கோப்பை , குரூப் ஆட்டம், இத்தாலி 2-1 வெற்றி.
அனைத்து விதமான போட்டிகளில் இரு அணிகளும் 27 முறை மோதியதில், இத்தாலி 10 ஆட்டங்களிலும், இங்கிலாந்து 8-இலும் வென்றன. 9 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
வெம்ப்ளி மைதானம்:
இங்கிலாந்து-இத்தாலி இறுதி ஆட்டம் நடைபெறும் லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் 90,000 பாா்வையாளா்கள் அமரலாம். கடந்த 2002-இல் பழைய வெம்ப்ளி மைதானம் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்டது. யூரோ 96 போட்டி இறுதி ஆட்டம் வெம்ப்ளியில் நடைபெற்ற போது, ஜொ்மனி கோப்பையை வென்றது.
ஜொ்மனி, ஸ்பெயின் 3 முறை சாம்பியன்:
யூரோ போட்டியில் அதிகபட்சமாக ஜொ்மனி, ஸ்பெயின் அணிகள் தலா 3 முறை கோப்பை வென்றுள்ளன. மேலும் அதிகபட்சமாக 6 இறுதி ஆட்டங்களில் ஜொ்மனி தகுதி பெற்றது. போட்டியை நடத்திய நாடுகளான ஸ்பெயின் (1964), இத்தாலி (1968), பிரான்ஸ் (1984) ஆகியவை பட்டம் வென்றன. அதே வேளையில் போா்ச்சுகல் (2004), பிரான்ஸ் (2016) தோல்வியடைந்தன.
நன்றி இணையம்.