ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி எடுத்திருந்த முதல் படம் நாஸா வெளியிட்டது.

மிகுந்த காத்திருத்தலின் பின், ஜெர்மன் நேரம் நள்ளிரவு 12:30 மணியளவில்,ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி எடுத்திருந்த முதல் படத்தை, வெள்ளை மாளிகையிலிருந்து அதிபர் ஜோ பைடன் மூலமாக நாஸா வெளியிட்டது.

13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஆரம்ப அண்டத்தினலிருக்கும் உடுக்களையும் (Stars), உடுத்திரள்களையும் (Galaxy) துல்லியமாகப் படம் எடுத்திருக்கிறார்கள். அப்படங்களை நாளை வெளியிடுவார்கள். இந்தப் படத்தில், ‘ஈர்ப்பு வில்லை’ (Gravitational Lensing) எனப்படும் அதியீர்ப்பின் அண்டவெளி வளைவில், ஒளியும் வளைந்திருக்கும் விளைவுகளை நீங்கள் தெளிவாகப் பார்க்கலாம்.

இதுவரை 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரான படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அரை பில்லியன் ஆண்டுகள் பின்னோக்கி, அதாவது 13.5 ஆண்டுகள் வரை ஜேம்ஸ் வெப் படமெடுக்க இருக்கிறது. அண்டம் உருவாகி வெறும் 300 மில்லியன் ஆண்டு வயதாக இருக்கும்போதான படமாக அது இருக்கும்.

சரியாகச் சிந்தித்துப் பாருங்கள். நாம் பார்ப்பதற்காகவே, 13 பில்லியன் ஆண்டுகளாகப் பயணம் செய்து வந்த ஒருசில போட்டான்கள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கண்ணாடிகளில் மோதியிருக்கின்றன. அத்துடன் அவற்றின் பயணத்திற்கான காரணம் முடிவடைந்துவிட்டது. அந்த ஒருசில போட்டோன்களே, போட்டோக்களாகியிருக்கின்றன.

நாளை மேலும் சில படங்கள் நாஸாவால் வெளியிடப்படலாம்.

இந்தப் படத்தைப் பார்த்ததும், “அட! இதிலென்ன இருக்கிறது? வெறும் புள்ளிகளும் ஒளிவீச்ககளும் மட்டுமே தெரிகின்றன. இதற்காகவா 25 வருட உழைப்பையும், 10 பில்லியன் டாலர்களையும் செலவழித்தார்கள்?” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், தலையை CT Scan மூலம் படமெடுத்துப் பார்க்கும்போது, அதிலுள்ளவை உங்களுக்கு வெறும் கோட்டுப். படம்தான். ஆனால், அதற்கெனப் பயிற்சிபெற்ற மருத்துவர்களுக்கோ பல தகவல்களைக் கொடுக்கும் பொக்கிசம். அதுபோலத்தான், ஜேம்ஸ் வெப் எடுத்திருக்கும் இந்தப் படங்களும் அறிவியலாளர்களுக்குத் தகவல் சுரங்கமாக இருக்கும்.

மேலும் அரை பில்லியன் ஆண்டுகள் பின்னோக்கிப் படமெடுக்கும்போது, பேரண்டத்தை ஆறு நாட்களில் படைத்துவிட்டு, ஏழாவது நாள் ஓய்வெடுக்கச் சென்ற கடவுளின் கால் விரலையாவது ஜேம்ஸ் வெப் ஒருவேளை கண்டுபிடிக்கலாம். யார் கண்டது?

-ராஜ்சிவா

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net