சில்வர் குதிரையில் இளம் பெண்ணின் செய்ன் நதிச் சவாரி!

நேற்றைய ஒலிம்பிக் தொடக்க விழாவில் மாஜாஜாலம் போலத் தோன்றி ரசிகர்களின் மனதைத் தொட்ட காட்சிகளில் சில்வர் குதிரையின் செய்ன் நதிச் சவாரியும் ஒன்று.

தொடக்க விழா நிகழ்ச்சி நிரலில் “ஒற்றுமை” (Solidarité) என்ற தலைப்பின் கீழான நிகழ்வுகளில் ஒன்றாக இந்தக் குதிரைச் சவாரி நடந்தது.

செய்ன் நதியில் ஒஸ்ரலிஸ் பாலத்தடியில் ஆரம்பித்து ஈபிள் கோபுரத்தின் அடிவாரம் வரை- சுமார் ஆறு கிலோமீற்றர்கள் தூரத்துக்குப் – பத்து நிமிட நேரம் நீடித்த குதிரைச் சவாரியை லட்சக்கணக்கான ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒலிம்பிக் கொடியைப் போர்த்தபடி வெள்ளி ஆடை அணிந்த இளம் பெண் ஒருவர் ஜொலிக்கும் வெள்ளி நிறக் குதிரையைச் செலுத்திச் செல்லும் அற்புதக் காட்சியாக அதன் முழு அமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சி சொல்லும் தகவல் என்ன..?

ஒலிம்பிக் போட்டிகளின் ஆன்மீகமாகிய நட்பையும் ஒற்றுமையையும் உலகெங்கும் பரப்புவதே குதிரைச் சவாரியின் நோக்கம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

குதிரை செய்ன் நதியின் மேம்பாலங்களைக் கடந்து சென்ற போது பாலங்களில் புறாவின் இறக்கைகள் விரிவது போன்ற ஒளி அலங்காரங்கள் தோன்றின.

பாரிஸ் ஒலிம்பிக் விழாவின் கலைத்துவ இயக்குநர் தோமா ஜொலியின் (Thomas Jolly) கூற்றுப்படி, இளம்பெண்ணின் குதிரைப் பயணம் புராணக் கதைகளில் வருகின்ற செக்குவானா (Sequana) என்ற பெண் தெய்வத்தின் அவதாரமாகக் குறிப்பிடப்படுகிறது.”நதியின் தெய்வம்”, “எதிர்ப்பின் அடையாளம்” போன்ற அர்த்தங்களிலும் இதனைப் பார்க்கலாம் என்று அவர் கூறுகிறார்.

நதிகள் தொடர்பான புராணக் கதைகளில் அதன் ஊற்றிடங்களில் காணப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற இளம் பெண் தெய்வமே “செக்குவான” எனப்படுகிறது. தண்ணீர் ஊற்றின் மனித வடிவமாகக் குறிப்பிடப்படுகின்ற

இந்தப் பெண்ணே செய்ன் நதியில் குதிரை மேலே தோன்றினார்.

சவாரி முடிவடைந்ததும் குதிரையில் வந்த பெண்ணே ஒலிம்பிக் கொடியை

அதனை ஏற்றிய இடத்துக்கு எடுத்தச் செல்வது போன்று அதன் தொடரான காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

ரோபோ தொழில் நுட்பத்தின் அடிப்படையில் குதிரையின் அசல் ஓட்டத்தின் அசைவுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் விதமாக சுமார் ஓராண்டுகால முயற்சியில் இந்த உலோகக் குதிரை உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் நொந்த்(Nantes) நகரில் அமைந்துள்ள Blam workshop என்ற தொழில்நுட்பப் பட்டறையிலேயே அது வடிவமைக்கப்பட்டது என்ற கூடுதல் தகவல்களும் வெளியாகியுள்ளன.

நன்றி குமாரதாஸன் பாரீஸ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net