மும்பை இ.எஸ்.ஐ வைத்தியசாலையில் தீ விபத்து : 8 பேர் பலி!
மும்பையின் அந்தேரி பகுதியில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ வைத்தியசாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
5 மாடி கட்டடத்தில் இயங்கிவரும் மத்திய அரசுக்கு சொந்தமான ‘காம்கார்’ என்ற தொழிலாளர் நல வைத்தியசாலையில், நேற்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில், வைத்தியசாலையின் 4ஆவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் தீ ஏனைய இடங்களுக்கும் பரவியதால், அதிகளவில் கரும்புகை வெளியேறி வைத்தியசாலை பகுதி முழுவதையும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.
இதையடுத்து வைத்தியசாலையிலிருந்த வைத்தியர்கள், உள்நோயாளிகள், வைத்தியசாலை ஊழியர்கள் என அனைவரும் வெளியேற முற்பட்ட வேளை, புகையின் காரணமாக பலருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து 12 தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், 4 மணிநேரம் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்துள்ளனர்.
தீயணைக்கும் பணி ஒருபுறம் இடம்பெற்றிருக்க, மறுபுறம் வைத்தியசாலைக்குள் சிக்கியிருந்தவர்களை ராட்சத கிரேன் மூலம் மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.
இதில், 141 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட போதிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.