11 கோடி ரூபாயை இழந்தேன்!
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், கூறியிருப்பதாவது:
2018-ம் ஆண்டு எப்படி போனது?
இந்த ஆண்டு திருப்திகரமாகத்தான் இருந்தது. ஆனால் பணரீதியாக மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தேன். காரணங்கள் என்ன என்றே சரியாகத் தெரியாமல் ரூ.11 கோடி இழந்தேன்.
‘சீதக்காதி’ உங்களது 25-வது படம். உங்கள் நடிப்பு வாழ்க்கையில் இது எவ்வளவு முக்கியமான தருணமாக இருக்கிறது?
நமது தொழில், நமது பங்கு குறித்து அதிகமாக சந்தோஷப்பட்டால் நாம் மாறிவிடுவோம் என நான் நினைக்கிறேன்.
எனது அடுத்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்ற நிலையில் நான் இருப்பதே எனக்குப் பெரும் மகிழ்ச்சி. நடிப்பு எளிதான வேலை அல்ல. அதை எளிமையாக மக்களுக்குக் கொண்டு செல்வதென்பது மிகப்பெரிய சவால்.
ஒரு நடிகராக, எப்போதும் சினிமாவைப் பற்றிதான் நினைத்துக் கொண்டிருப்பீர்களா?
ஒருகட்டத்துக்குப் பிறகு எல்லோருமே அவர்கள் தொழிலோடு ஒன்றிவிடுவார்கள் என நான் நினைக்கிறேன். நடித்து முடித்த பிறகு மானிட்டர் பார்க்கும் பழக்கம் எனக்குக் கிடையாது.
நான் எனது ஆடை வடிவமைப்பாளரைப் பார்க்கச் சொல்லி, அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன். சில நேரங்களில், அது நன்றாக வந்திருக்கிறது என்று அவர் சொன்னாலும் கூட, அதில் நான் நன்றாக நடித்திருக்கிறேனா என்பதை இரவில் தூங்கும்போது நினைத்துப் பார்ப்பேன்.
‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்திருக்கிறீர்கள். அவருக்கு எதிராக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
ரஜினி போன்ற பெரிய நடிகருக்கு எதிராக வில்லனாக நடிக்கும்போது, நாம் வேகமாக இருக்க வேண்டும். அவர் என்ன செய்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார்போல நடிக்க வேண்டும். அவருடன் நடிப்பது என்பது நடிப்புக்கான வகுப்பில் கற்றது போல இருந்தது.
இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக்குடன் நடித்த அனுபவம்?
அவர், தனது தொழிலை மதிக்கும் ஒரு உண்மையான மனிதர். எந்தப் படத்திலும் முழு மனதுடன் நடித்தால், அது ரசிகர்களின் மனதைத் தொடும் என்பதை அவர் ஆழமாக நம்புகிறார்.
நீங்கள் சினிமாவில் நுழையக் காரணம், ரசிகர்களின் கைதட்டல் மட்டும்தானா?
கண்டிப்பாக… ‘வர்ணம்’ என்றொரு படம். சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவனாக நான் நடித்தேன். அதில் முதல் காட்சியே என் வாயில் ஒருவர் சிறுநீர் கழிப்பது போன்றது. நான் அதில் நடித்து முடித்ததும், ஒட்டுமொத்தப் படக்குழுவும் கைதட்டினர்.
அது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ஏனென்றால், என்னால் நடிக்க முடியும் என்று நான் உணர்ந்தது அன்றுதான். நான் நடிப்பதால்தான் அந்தக் குழுவில் இயக்குநரில் ஆரம்பித்து லைட்மேன் வரை வேலைசெய்ய முடிகிறது என்பதை எனக்கு நானே பலமுறை சொல்லிக்கொண்டேன்.