நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் கூடுகிறது!
புதிய அரசாங்கத்தின் முதலாவது தெரிவுக்குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் சபாநாயகர் அறிவிப்பு வேளையில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் விலகி இன்னொரு கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளனர். ஆகவே அவர்கள் சுதந்திரக் கட்சியின் உறுப்புரையை இழந்துள்ளனர்.
நாடாளுமன்ற ஏற்பாடுகளுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இது குறித்து தெரிவுக்குழு ஒன்றை உருவாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் கூடவுள்ள தெரிவுக்குழுவில் இவ்விடயம் குறித்து ஆராயப்படுமென தெரிவிக்கப்படுகிறது.