நாடாளுமன்ற நடவடிக்கைகள் எட்டாவது நாளாகவும் முடங்கின!
ரபேல் மற்றும் மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டமையால் எட்டாவது நாளாகவும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கி உள்ளன.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பமானது.
இதன்போது மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து தெலுங்குதேசம் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பிற கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணியளவில் ஒத்திவைக்கப்பட்டது.
அதேபொன்று ரபேல் விவகாரம், காவிரி விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் இடைவிடாமல் முழக்கங்கள் எழுப்பினர்.
இதன்காரணமாக பிற்பகல் 2.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
அந்தவகையில் உறுப்பினர்களின் அமளி காரணமாக 8ஆவது நாளாகவும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கூட்டத்தொடர் தொடங்கிய நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.