அரசியல் சூழ்ச்சியை எதிர்த்தே ஐ.தே.க விற்கு ஆதரவளித்தோம்!

அரசியல் சூழ்ச்சியை எதிர்த்தே ஐ.தே.க விற்கு ஆதரவளித்தோம்!

சூழ்ச்சியின் மூலம் அரசைக் கவிழ்ப்பது தவறான நடவடிக்கை என்பதாலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனை எதிர்த்து, ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளித்ததாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கான தீர்வு மற்றும் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு உள்ளிட்ட பல விடயங்களை நிபந்தனைகளாக முன்வைத்தே ஆதரவளித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – ஏறாவூர் எல்லை நகரில் இடம்பெற்ற ஒளிவிழா மற்றும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் தெரிவித்த அவர்,

“சர்வாதிகாரத்தைவிட மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும். எமது ஐந்து வருடகால ஆயுட்கொண்ட நாடாளுமன்றத்தை சர்வாதிகார அடிப்படையில் கலைக்கின்ற போக்கினைத் தோற்கடிக்க சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டோம்.

சூழ்ச்சியின் மூலம் அரசைக் கவிழ்ப்பது தவறான நடவடிக்கை என்பதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை எதிர்த்து.

ஜனநாயகத்தை, சட்ட ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு உச்ச கட்ட ஆதரவை வழங்கியது.

அத்தோடு காணிகளில 80 சதவீதமானவை விடுவிக்கப்பட்டமை மற்றும் 107 தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தமை போன்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கடந்த காலங்களில் செய்த நல்லவற்றையும் எம்மால் மறக்க முடியாது.

நிறைவேற்று அதிகாரம் பக்கச் சார்பாக செயற்பட்டதோடு சட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் நீதித்துறை சுதந்திரமாக சுயாதீனமாக செயற்பட்டதன் காரணமாக ஜனநாயக அடிப்படையில் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.“ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net