ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமருக்கு 7 ஆண்டு சிறை!

ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமருக்கு 7 ஆண்டு சிறை!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் செரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா கடந்த 19-9-2018 அன்று உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள்.

இதற்கிடையில், நவாஸ் செரீபுக்கு எதிராக பொறுப்புடைமை நீதிமன்றத்தில் பிலாக்‌ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கு மற்றும் அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கு என மேலும் இரு ஊழல் வழக்குகள் நடைபெற்று வந்தன.

இவ்வழக்குகளில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. பிலாக்‌ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கில் இருந்து நவாஸ் செரீப்பை விடுவித்தும், அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் நீதிபதி அர்ஷத் முஹம்மத் மாலிக் உத்தரவிட்டார்.

அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் நவாஸ் செரீபுக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளதால் இந்த தண்டனை விதிக்கப்படுவதாக தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 9461 Mukadu · All rights reserved · designed by Speed IT net