பாம்பன் ரயில் பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் நிர்மாணம்!

பாம்பன் ரயில் பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் நிர்மாணம்!

ராமேஸ்வரத்துக்கு செல்லும் பாம்பன் ரயில் பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

புத்தாண்டு பரிசாக, 250 கோடி ரூபாயில் இந்த பாலம் அமைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான ஆய்வு பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் ரயில்வே அமைச்சகம் நேற்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.

முன்பிருந்த பாலம் 104 ஆண்டுகள் பழைமையானதாக இருப்பதாலும், தூக்கு பாலத்தில் விரிசல் விழுந்திருப்பதாலும் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாலம் நிர்மாணிக்கும் பணி அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. பாலத்தை கட்டி முடிக்க 4 அல்லது 5 ஆண்டுகள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் நீரால் அரிப்பு ஏற்படாதவகையில் துருப்பிடிக்காத உருக்கு கம்பிகளை கொண்டு புதிய பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. தற்போதைய பாலத்துக்கு அருகிலேயே அதைவிட 3 மீற்றர் அதிக உயரத்தில் இந்த புதிய பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. அதனால் ஒரே நேரத்தில் 2 கப்பல்கள் கடந்து செல்ல முடியும் என அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய பாலத்தின் நீளம் இரண்டரை கி.மீ. என்றும். இரட்டை ரயில் பாதையாக இப்பாலம் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இதில், 63 மீற்றர் நீள தூக்கு பாலமும் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தூக்கு பாலம், செங்குத்தாக திறந்து மூடும் வகையில் இருக்கும் என்றும் மின்மோட்டார் மூலம் தானியங்கி முறையில் தூக்கு பாலம் செயற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பத்தில் தூக்கு பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 7234 Mukadu · All rights reserved · designed by Speed IT net