பாராட்டப்பட வேண்டிய இலங்கை கிரிக்கெட் சபை.

InppaaslcArticle
இலங்கை கிரிக்கெட் சபை, ஏனைய அமைப்புகள், ஏனைய அரச அமைப்புகள் உள்ளிட்ட அதிகார அமைப்புகள் தவறு செய்யும்போதெல்லாம், அவற்றுக்கான விமர்சனங்களை முன்வைப்பதென்பது, ஊடகங்களினதும் ஏனைய சிவில் அமைப்புகளினதும் கடமையாகும். அதன்மூலமே, அதிகார அமைப்புகள், தங்கள் தங்கள் கடமைகளைத் தொடர்ச்சியாகத் தவறின்றி முன்வைப்பது உறுதிசெய்யப்படும். அதேபோல், அந்த அமைப்புகள், சிறப்பான கடமைகளை ஆற்றும்போது, அதைப் பாராட்ட வேண்டியதும் கடமையாகும்.

இலங்கை கிரிக்கெட் சபை மீதும் அதன் நிர்வாகத்தினர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்த விமர்சனங்களுக்கு, அவர்கள் பொருத்தமானவர்களாகவே இருந்தார்கள். ஆனால், தற்போது ஒரு விடயத்தில், அதிகமான பாராட்டுகளுக்கு அவர்கள் பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள். குசால் பெரேரா விடயம் தான் அது.

இலங்கையின் முக்கிய வீரராக இருந்த குசால் பெரேரா, ஊக்கமருந்தைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், சர்வதேச கிரிக்கெட் சபையால் இடைநிறுத்தப்பட்டபோது, இலங்கைக்கு மிகப்பெரிய இடியாக அமைந்தது. அதுவும், உலக இருபதுக்கு-20 தொடருக்குச் சில மாதங்களே இருந்த நிலையில், இலங்கையின் அதிரடி துடுப்பாட்ட வீரர் இல்லாமற்போவதென்பது, பாரிய அடியே. அதைவிட, நீண்டகால நோக்கில், குசால் பெரேராவுக்கான தடையென்பது, மிகவும் மோசமானது. ஊக்கமருந்துப் பயன்பாட்டுக்காக, அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படுமாயின், அவரின் எதிர்காலம் மாத்திரமன்றி, இவ்வளவு காலமும் வாய்ப்புகள் வழங்கி, தனது உச்சநிலையை நெருங்கிக் கொண்டிருக்கும் துடுப்பாட்ட வீரரை இழப்பதென்பது, இன்னமும் கவலைதரக்கூடியது.

இந்த நேரத்தில், இதற்கு முன்னைய கிரிக்கெட் சபைகள், லசித் மலிங்க காயமடைந்திருந்தபோது, அவரது கிரிக்கெட் ஒப்பந்தத்தை நீக்கி, அவருக்கான மருத்துவ ஒப்பந்தங்களை நீக்கியமை போன்று, குசால் பெரேராவையும் கைவிட்டிருக்க முடியும். ஆனால், திலங்க சுமதிபால தலைமையிலான இந்தச் சபை, குசால் பெரேராவை ஆதரிக்க முடிவுசெய்தது. குசால் பெரேராவை நம்புவதாக, அரவிந்த டி சில்வா தெரிவித்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே, குசால் பெரேராவுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்ததாக, சுமதிபால தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் இதில் குறிப்பிடப்பட வேண்டியவர்.

இதன்படி, குசால் பெரேரா சார்பான வழக்கினை முன்னெடுப்பதற்கு, இலங்கை கிரிக்கெட் சபை சார்பாக 15 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. நிபுணர்களின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. பல மாதகாலப் போராட்டத்தின் பின்னர், குசால் பெரேரா விடுவிக்கப்பட்டார்.

குசால் பெரேரா விடுவிக்கப்பட்டதன் பின்னரும் கூட, குசால் பெரேராவுக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, குறித்த வழக்கின் செலவுகளை சர்வதேச கிரிக்கெட் சபை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றவாறான கோரிக்கையை முன்வைத்திருக்கிறது. இது தொடர்பில் சில குழப்பங்கள் நிலவுகின்ற போதிலும், இது மிக முக்கியமானது.

இலங்கை கிரிக்கெட் சபையால் செலவளிக்கப்பட்ட பணத்தைத் தாண்டி, குசால் பெரேராவினாலும் ஏராளமான பணம் செலவளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, 13 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம் செலவளிக்கப்பட்டுள்ளதாக, முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வழக்குக்கான செலவுகளைக் கோருவதன் மூலம், தனது நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, பாதிக்கப்பட்ட வீரரின் பக்கத்தில் நியாயத்தின் சார்பாகக் குரலெழுப்பத் தயாராக இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

ஏனைய விடயங்களில், அச்சபை மீதான விமர்சனங்கள் எவ்வாறிருந்தாலும், குசால் பெரேரா விடயத்தில் அச்சபை வெளிப்படுத்திய சிறப்பான செயற்பாடுகளுக்கும் எடுத்த சிறப்பான முடிவுகளுக்கும், அச்சபைக்கான பாராட்டுகள், நிச்சயமாக வழங்கப்பட வேண்டும். அவற்றுக்கு அச்சபை, மிகவும் பொருத்தமானது.

Copyright © 9898 Mukadu · All rights reserved · designed by Speed IT net