சு.க.வின் தலைமையகத்தை மூடுமாறு பணிப்புரை?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கட்சித் தலைமையகத்தை எதிர்வரும் 2 ஆம் திகதிவரை செயற்படாது மூடுமாறு அந்தக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த திங்கட்கிழமை தாய்லாந்துக்கு விஜயம் செய்திருந்தார். வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி எதிர்வரும் 2 ஆம் திகதியே நாடு திரும்பவுள்ளார்.

இந்த நிலையிலேயே சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தின் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக நம்பகரமாக தெரிகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து எதிர்வரும் தேர்தல்களை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திங்கட்கிழமை நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களின் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து சுதந்திரக்கட்சி செயற்பட்டால் தாம் தனித்து சுயாதீனமாக செயற்படப்போவதாக கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறியுள்ளனர்.
இந்த அமைப்பாளர் கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி வெ ளிநாடு செல்வதற்காக இடை நடுவில் வெ ளியேறிசென்றதையடுத்து கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ உரையாற்றியபோது அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எஸ்.பி. திஸநாயக்க உரையாற்றியபோதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை யடுத்து அவர் கூட்டத்திலிருந்து வெ ளியேறி சென்றிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக்கட்சியின் போசகருமான சந்திரிகா குமாரதுங்கவும் பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரக்கட்சி இணைவதை விரும்பவில்லை.
இந்த நிலையிலேயே தான் நாடு திரும்பும் வரையில் சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தை மூடுமாறும் செயற்பாடுகளை இடைநிறுத்தும்படியும் ஜனாதிபதி பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.