வெள்ள அனர்த்தத்திற்கு வியாக்கியானம் கூறும் டக்ளஸ்!

வெள்ள அனர்த்தத்திற்கு வியாக்கியானம் கூறும் டக்ளஸ்!

உரிய காலப்பகுதியில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருக்குமேயானால் அதனால் ஏற்பட்டிருக்கக் கூடியதான அழிவுகளையும் சேதங்களையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் வடக்கில் பெய்த கனமழை காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டன.

இயற்கையைக் கட்டுப்படுத்த முடியாது போனாலும் அதனால் ஏற்பட்டிருக்கக் கூடியதான அழிவுகளை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும்.

இவ்வாறான அழிவுகளுக்கும் சேதங்களுக்கும் சரியான அரசியல் தலைமையின் நெறிப்படுத்தலின்மையே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அந்தவகையில் தற்போது மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் மற்றும் பாதிப்புகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நாம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

இரணைமடுக் குளத்தினூடாக யாழ் குடாநாட்டு மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாது என சக தமிழ் கட்சிகளும் கூறிவந்த போதிலும் இன்று இரணைமடு குள நீர் கடலுக்குள் செல்வதானது தவிர்க் முடியாததாகியுள்ளது.

இந்நிலையில் தான் நாம் கிளிநொச்சி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான நீரை தவிர்ந்த எஞ்சிய நீரை குடாநாட்டு மக்களுக்கு வழங்குமாறு கோரிக்கையினை முன்னைய காலங்களில் விடுத்திருந்தோம்.

இந்நிலையில், கீழ்வாய்க்கால் அணைக்கட்டுமாணம் மற்றும் குளத்தின் அணைக்கட்டு போன்ற பாதுகாப்பு விடயங்களில் ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

அதன்பிரகாரம் நோக்குமிடத்து 7 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்ட நிலையில் அந்த நிதியூடாக மேற்கொள்ளப்பட்ட வேலைகள் யாவும் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி வான்கதவுகள் பாலங்கள் பொருத்தமற்றவையாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனவே எதிர்காலங்களில் இவ்வாறான ஊழல்கள் இடம்பெறாத வண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டியது சகல ஊடகங்களின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net