அமெரிக்கா ஏமாளி அல்ல!
தொடர்ந்தும் இந்த உலகின் ஏமாளியாக திகழ அமெரிக்கா தயாராக இல்லை என, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈராக்கிற்கு நேற்று (புதன்கிழமை) திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ட்ரம்ப், அங்கு போரிட்டுவரும் அமெரிக்க துருப்புக்களை நேரில் சந்தித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தொடர்ந்து உரையாற்றிய அவர்,
”நாம் பிற தேசங்களை கட்டியெழுப்புபவர்கள் அல்ல. சிரியாவை அரசியல் தீர்வின் மூலமே மறுசீரமைக்க வேண்டும். அண்டைய செல்வந்த நாடுகளின் நிதியுதவிகளை கொண்டு சிரிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அமெரிக்காவினால் அல்ல.
இந்த உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்காகவும் அமெரிக்கா சண்டையிடப் போவதில்லை. பிற நாடுகளுக்காக நாம் போராட வேண்டுமாயின் அவர்கள் நமக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, இனிமேலும் நாம் ஏமாளிகளாக திகழப் போவதில்லை.
ஆனால், ஈராக்கில் அமெரிக்க துருப்புக்களின் இருப்பு தொடர்ந்து பேணப்பட்டு, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் எழுச்சியை தடுப்பதுடன், அமெரிக்க நலன்களை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி விஜயத்தில் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்பும் கலந்துக் கொண்டிருந்தார். ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்று சுமார் 2 வருடங்களில் மோதல் வலயமொன்றுக்கு விஜயம் செய்துள்ளமை இதுவே முதல் தடவையாகும்.