கிளிநொச்சியில் டெங்கு நோய் பரவும் அபாயம்!

கிளிநொச்சியில் டெங்கு நோய் பரவும் அபாயம்!

சுகாதார அமைச்சின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மாதத்தில் மட்டும் 32 டெங்கு நோயாளிகள் கிளிநொச்சியில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இது மாவட்டத்தில் கடந்த காலங்களில் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களது எண்ணிக்கைகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 2017 ஆம் ஆண்டு இனங்காணப்பட்ட மொத்த டெங்கு நோயாளர்களில் 0.27 வீதமான நோயாளர்கள் கிளிநொச்சியில் இனங்காணப்பட்டிருந்தனர்.

ஆனால் டெங்கு நோய் பெருக்கம் எதுவும் இல்லாத தற்போதைய காலப்பகுதியில் இதுவரை நாட்டில் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களில் 0.65 வீதமான நோயாளர்கள் கிளிநொச்சியில் இனங்காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் இது மிக அதிகம் எனவும் 100000 பேரில் 212 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகும் சாத்தியம் தற்போது நிலவுவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மழைக் காலநிலை டெங்கு நோய்ப்பரம்பலை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதால் அனைத்துப் பொதுமக்களும் தமது வசிப்பிடங்கள், வேலைத்தளங்கள் , பொது இடங்கள் மற்றும் பாடசாலை ஆகியவற்றைச் சுத்தமாகப் பேணி உயிர் கொல்லி டெங்குவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் எனச் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

கிளிநொச்சியில் கரைச்சி சுகாதார வைத்திய அதிகார பிரிவே அதிக டெங்கு அபாயம் நிலவும் பிரதேசமாக டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவினால் இனங்காணப்பட்டுள்ளது.

இவ்வருடம் ஆவணி மாதமே இது குறித்துச் சமுதாய வைத்திய நிபுணர்கள் மற்றும் ஊடகங்கள் எச்சரித்திருந்தும் அது குறித்து மாவட்ட சுகாதாரத்துறையினர் உரிய கவனம் செலுத்தத் தவறியதன் விளைவே இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net