வவுணதீவு பொலிஸார் படுகொலையை மாவீரர் தினத்துடன் முடிச்சுபோட முயற்சி!
வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் அப்படுகொலையை மாவீரர் தினத்துடன் முடிச்சுப் போடுவதை ஏற்க முடியாது என த.தே.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
”இல்லத்திற்கு வந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் மாவீரர் தினம் இடம்பெற்ற காலப்பகுதியில் நான் எங்கு இருந்தேன் என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன்போது, மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் செய்தது, மாவீர் தினத்தில் கலந்து கொண்டது போன்ற வியயங்களை நான் அவர்களிடம் தெரிவித்தேன்.
கொழும்பில் அழைத்து விசாரணை நடத்துவதில் காணப்படும் சிரமங்களை தவிர்ப்பதற்கே தாம் மட்டக்களப்பிற்கு வந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
வவுணதீவில் பொலிசாரைக் சுட்டுக் கொன்றவர்கள் கண்டுபிடித்து சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டும்.
இதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அக்கொலைச் சம்பவத்தை மாவீரர் தினத்துடன் முடிச்சுப் போடுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்” எனத் தெரிவித்தார்.