ஒரு கிராமம் பற்றிய ஆவணப்படம் ஓன்று அந்த கிராமம் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்ற நோக்கிலும் , தனது மேல்படிப்புக்கான ஆய்வுக்காகவும் ஒரு மாணவனால் எடுக்கப்படுவது நான் அறிந்தவரை இதுவே முதலாவது ஆகும் . நாங்கள் எல்லாம் ஆய்வு கட்டுரைகள் கொடுக்கும் போது அதில் என்ன இருந்தது என்பதே எங்களுக்கு தெரிந்திருப்பதில்லை . ஆனால் ஒரு கிராமம் ஒன்றை தெரிவு செய்து அங்கே போய் தங்கி இருந்து , அந்த கிராமத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு , ஆய்வுக்காக இப்படியான ஒரு ஆவணப்படத்தை எடுத்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் , ஆவணப்படங்களின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்த கூடியதாகவும் இருந்தக்கு முதலில் இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் தங்கேஸ் இற்கும் இந்த படத்தை தயாரித்த அவரது மனைவிக்கும் நன்றிகள்
புங்குடு தீவின் பொறியிலாலராக இருந்த #அம்பலவாணர் என்பவாரால் அன்று கட்டப்பட்டூ இன்றும் எந்தவித பாரிய சேதமும் இல்லாமல் இருக்கும் புங்குடு தீவின் பாலத்தில் ஒரு மாலை நேரத்தில் புங்குடு தீவுக்குள் நுழைவது போல ஆரம்பித்து அதே பாலத்தில் ஒரு மாலை நேரம் புங்குடு தீவை விட்டு வெளியே வருவது மாதிரி முடிவடைகிறது ஒரு மணித்தியால நீளம் உள்ள அந்த ஆவணப்படம்.
வெறும் ஒரே ஒரு மணித்தியாலத்தில் புங்குடு தீவு எப்படி இருக்கும் என்று தெரியாத எங்களுக்கு புங்குடு தீவை சுத்தி காட்டியுள்ளார் ஆவணப்படத்தின் ஒளிப்பட இயக்குனரான #சுரேன் . புங்குடு தீவின் அழகை எவ்வாறு தனது கமெரா மூலம் காட்டினாரோ அதே மாதிரி அங்கே கவனிப்பாரற்று கிடக்கும் பல ஏக்கரான காணிகளையும் , அதனால் அழகற்று போய் கொண்டிருக்கும் புங்குடு தீவின் மறுபக்கத்தையும் தத்ரூபமாக காட்டியுள்ளார். பனை மரத்தில் இருந்து கள்ளு சீவும் தொழிலாளி ஒருவரினை காட்டி இருந்தார் . அந்த காட்சியில் அந்த கமெரா அதே அளவு உயரத்தில் வைத்து பக்கவாட்டில் இருந்து எடுத்திருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . கிறேன் போன்ற இயந்திரங்கள் பயன்படுத்தாமல் எவ்வாறு அந்த காட்சி படமாக்கப்பட்டிருக்கும் என்பது வியப்பாகவே இருக்கு
இந்த ஆவணப்படத்தின் கதை சொல்லியாகவும் , ஆவணப்படத்தின் மூலம் சொல்ல விளையும் கருத்துகளை ஒருமுகப்படுத்தும் முகமாகவும் படத்தின் இயக்குனர் இடையிடையே தோன்றி ஆவணப்படத்தை தொய்வில்லாமல் நகர்த்த உதவியிருக்கிறார் . ஊரில் இருக்கும் மக்களிடம் செவ்வி மூலம் தான் சொல்ல வேண்டிய கதையினை அவர்கள் வாயிலாகவே , மக்களின் குரலாகவே வெளிக்கொண்டு வருகிறார் . யாழ் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக இருந்த பாலசுந்தரம்பிள்ளை முதல் கொண்டு அந்த ஊரின் பாமர மக்கள் வரை அவர் செவ்வி கண்டது இந்த இந்த ஆவணப்படம் மூலம் சொல்ல வந்த கருத்துக்கு வலு சேர்த்திருக்கு
ஆவணப்படத்தின் திரைகதை வடிவமைப்பை செய்தவர் #ஞானதாஸ் அவர்கள். ஈழ சினிமாவுக்கு அவரை பற்றிய அறிமுகம் தேவையில்லை . அவரை பற்றி தெரிய முதலே அவரின் படம் ஒன்றை நான் பார்த்திருதேன் . 1990-1995 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நாம் பொம்மர் குண்டுகளின் மத்தியில் பங்கருக்குள்ளும் , வீட்டுடன் கூடிய தொழில்கள் ஊடாகவும் வாழ்ந்த முறைமையை காட்டி இருந்தார். “எண்ணெய் தொழில் ” செய்யும் குடும்பம் ஒன்றை வைத்து அந்த கதை பின்னப்பட்டிருந்தது . எங்களால் மறக்கப்பட்டு கொண்டிருக்கும் நாங்கள் வாழ்ந்த வாழ்கையின் ஆவணமாக அந்த குறும்படம் ஆவணப்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தேன் . அந்த படத்தின் பெயர் மறந்து விட்டது . அத்தகைய நீண்டகால ஈழ தமிழ் சினமாவில் அனுபவமுள்ள கலைஞன் , சமூக சிந்தனைகளை கலைகள் மூலம் வெளிவர கொண்டுவர துடிக்கும் கலைஞன் இந்த ஆவணப்படத்தை மிக திறமையாக செதுக்கி பார்வையாளருக்கு விருந்தாக்கியுள்ளார் .
“#புங்குடு தீவில் இருந்த மக்கள் அங்கெ மீளவும் திரும்பி வராத காரணத்தால் அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளும் , அந்த பிரச்சனைகளை தீர்க்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் ” என்பது தான் ஆவணப்படத்தின் கதை.
புங்குடு தீவில் காணப்படும் சமூக அமைப்புகளை மிக சாதுரியமாக காட்டி, அந்த சாதி அமைப்புகளிடையே காணப்படும் பிரச்சனைகளையும் தெளிவாக காட்டி உள்ளார் . வரையறை இல்லாமலும் , ஒரு சரியான திட்டமிடல் இல்லாமலும் கட்டப்படும் கோவில்களினால் பணம் விரயமாக்கப்படுவதையும் , அதனால் புங்குடுதீவின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தையும் காட்டிய அவர் தப்பி தவறி கூட கோவில் கட்ட கூடாது என்ற கருத்தையோ , அல்லது சமய வழிபாடுகள் தேவை இல்லாதவை என்ற கருத்தையோ வலியுறுத்தவில்லை
கோவில் கட்டி கொண்டிருக்கும் ஒரு நிர்வாகி சொல்லுறார் போன வருஷம் கட்டிமுடிச்ச கட்டிடம் ஒன்றை இடித்து விட்டு வேற ஒரு பெரிய மணிமண்டபம் கட்டுறாராம் என்று. வெளிநாட்டில் இருந்து போகும் காசு எப்படி வீண் விரயம் செய்யப்படுகிறது என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம் . “மாஸ்டர் பிளான் ” இல்லாத செயல் திட்டங்களுக்கு இப்படி தான் வீணாகிறது . இது புங்குடு தீவு கோயில் ஒன்றுக்கு காட்டப்பட்டிருந்தாலும் முழு யாழ்பாணத்தில் உள்ள கோயில்கள் , மற்றும் பாடசாலைகளுக்கும் பொருந்தும் .
இந்த ஆவணப்படம் கனடாவில் இருந்து திரும்பி வந்து புங்குடு தீவில் வசிக்கும் ஒரு வயோதிபர் ஊடாக பல விடயங்களை சொல்ல விளைகிறது . அவரை வைத்தே திரைக்கதையை தனது இலக்கு நோக்கி நகர்த்தியுள்ளார் . இருந்தாலும் அந்த வயோதிபர் அவசியமில்லா இடங்களில் உணர்ச்சி வசப்படுகிராரோ என்ற எண்ணம் வருகிறது . எல்லோர் மனங்களையும் கலங்கடித்து , எங்கேயோ நடந்த #வித்தியா என்ற பள்ளி மாணவியின் கொலை சம்பவம் எங்களையே கண்கலங்க வைத்தது. ஆனால் அதை அந்த இடத்திலே இருக்கும்மக்கள் சொல்லும் போது மிக சாதரணமாக கடந்து செல்வது போல ஒரு உணர்வு வருகிறது. அந்த காட்சிகள் புலம்பெயர் மக்களுக்கு நீங்களும் ஒருவகையில் அந்த சிறுமியின் கொலைக்கு காரணம் என்று காட்டுவதற்காக , திரைக்கதையின் மூல கதைக்கு உப கதையாக வந்ததால் அதை கவனிக்காமல் விட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்
கதையின் முடிவில் புலம்பெயர் மக்கள் எதை சொன்னால் புரிந்து கொளவார்கள் , அல்லது எப்படி சொன்னால் உடனடியாக செயல்பட தொடங்குவார்கள் என்பதை நன்கு அறிந்து அதற்கு ஏற்ற மாதிரி சொல்லி இருக்கிறார் திரைக்கதையை செதுக்கிய ஞானதாஸ் அவர்கள்.
அங்க தான் நிற்கிறார் ஞானதாஸ் அண்ணா .
இந்த ஆவணப்படம் புங்குடு தீவை மையப்படுத்தி அமைந்திருந்தாலும் இது எல்லா மக்களும் பார்க்க வேண்டிய ஆவணப்படம். குறிப்பாக புலம்பெயர் மக்கள் பார்க்க வேண்டிய படம். எல்லோரும் பாருங்கள் . இந்த ஆவணப்படத்தை எடுத்த தங்கேஸ், ஞானதாஸ் அண்ணா மற்றும் ஏனைய கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றிகள்
புங்குடு தீவு சிதைவுறுமா?? மீண்டும் புது பொலிவடையுமா? என்பது புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் கையிலேயே இருக்கு
நன்றி
ரதன்