சோதிடருக்கு காரை பரிசளித்து 8.2 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்திய மஹிந்தர்!

சோதிடருக்கு காரை பரிசளித்து 8.2 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்திய மஹிந்தர்!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட சோதிடரின் பாவனைக்காக கார் ஒன்றை வழங்கியதன் மூலம், மிஹின் லங்கா விமான நிறுவனத்துக்கு 8.2 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களின் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், மஹிந்தவின் தனிப்பட்ட சோதிடரான சுமணதாச அபேகுணவர்த்தன, இதுதொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளார்.

“2017ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில், எனக்கு கார் ஒன்று வழங்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி, தொலைபேசியில் அழைத்து, ராஜகிரியவில் உள்ள லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவனத்தில் வாகனம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்.

நான் அங்கு காரின் சாவியைப் பெற்றுக் கொண்டேன். அந்த வாகனத்துக்கான ஒரு ஆண்டு காப்புறுதியும் பெற்றேன்.

நான் முன்னாள் ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்ததால், அந்த கார் எனக்கு பரிசளிக்கப்பட்டதாக நினைக்கிறேன்.

எனினும், அந்த கார் மிகின் லங்கா நிறுவனத்துக்கு சொந்தமானது என்று எனக்குத் தெரியாது. அதன் உரிமை யாருக்கு சொந்தம் என்று எனக்குத் தெரியாது. அந்த காரை, 2007 தொடக்கம் 2015 வரை 8 ஆண்டுகள் நான் பயன்படுத்தினேன்.

மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், அந்தக் காரை லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவனம் மீளப் பெற்றுக் கொண்டது” என சோதிடர் சுமணதாச தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் மிகின் லங்கா நிறுவனங்களால், 26 கார்கள் லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவனத்தில் பெறப்பட்டதாகவும், இவற்றுக்கான தவணைக் கொடுப்பனவுகளை மிஹின் லங்கா நிறுவனமே செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net