பால்மாவுக்கு தட்டுப்பாடு வரும்!

பால்மாவுக்கு தட்டுப்பாடு வரும்!

கடுமையான செலவினம் காரணமாக இலங்கையின் பல முன்னணி பால்மா இறக்குமதியாளர்கள் இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு கூட்டாகத் தீர்மானித்திருப்பதாகத் தெரியருகிறது.

தற்போது செய்வதைப்போன்று இனிமேலும் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை பால்மா கம்பனிகள் தொடரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

இறக்குமதியை நிறுத்துவதுடன் தற்போதைய கையிருப்பை விற்பனை செய்வதையும் நிறுத்துவதைத் தவிர கம்பனிகளுக்கு வேறு மார்க்கம் இல்லை என்று இறக்குமதியாளர்கள் கூறுகிறார்கள்

பால்மா பக்கட்டுகளின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் அனுமதியளிக்காவிட்டால், விரைவில் பால்மாவுக்குத் தட்டுப்பாடு ஒன்று ஏற்படும் என்று பல பால்மா கம்பனிகளின் தலைவர்கள் கடந்த வார இறுதியில் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

இந்த கம்பனிகளுக்கு மாதாந்தம் 3 — 4 கோடி ரூபா இழப்பு ஏற்படுகிறது.துறைமுகத்தில் இருக்கும் பால்மா கையிருப்பை விடுவிக்காமல் இருக்கவும் பால்மாவின் விலையை 100 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் அனுமதியளிக்காத பட்சத்தில் புதிய இறக்குமதிக்கான கோரிக்கைகளை விடுக்காதிருக்கவும் கம்பனிகள் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

இலங்கை நாணயத்தின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி கண்டுவருகிறது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி 184 ரூபாவாக இருக்கும் நிலையில் பலவிதமான வரிகள் உள்ளடங்கலாக பால்மா இறக்குமதிக்கான செலவு கடுமையாக அதிகரித்திருக்கிறது.

அத்துடன் உலகசந்தையில் பால்மா விலை இப்போது உயர்ந்த மட்டத்தில் இருக்கிறது. ஆனால், பால் அத்தியாவசிய உணவு என்பதால் ஒரு சில வருடங்களுக்கு முன்னர் அரசாங்கம் பாலமாவுக்கான தீர்வையை கிலோவுக்கு 2 ரூபாவாக மாத்திரமே அறவிட்டது.

உலகச்சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் பால்மாவுக்கான விலை இப்போது 3250 –3350 அமெரிக்க டொலர்களாக இருக்கிறது.இது 3400 — 3500 டொலர்களாக அதிகரிக்கக்கூடும்.

இத்தகைய பின்புலத்தில், இறக்குமதிச் செலவுகளைச் சமாளிப்பதற்கு வசதியாக ஒரு கிலோ பால்மாவின் விலையை 100 ரூபாவால் அதிகரிக்க தங்களை அனுமதிக்குமாறு பால்மா கம்பனிகள் பாவனையாளர் விவகார அதிகார சபையையும் வாழ்க்கைச் செலவுக் கமிட்டியையும் கேட்டிருக்கின்றன.

பால்மா மீதான விலைக்கட்டுப்பாட்டையும் பெறுமதிசேர் வரியையும் (வற்) நீக்குவதே இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று கம்பனிகள் யோசனை கூறுகின்றன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net