பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூனா கடிதம்!

பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூனா கடிதம்!

சி.பி.ஐக்கு புதிய இயக்குனரை தெரிவு செய்ய, உயர் மட்ட குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே வலியுறுத்தியள்ளார்.

இது தொடர்பில் அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில்,

“சுதந்திரமான தலைவரின் கீழ் சி.பி.ஐ இயங்குவதைக்கண்டு பயப்படுவது போல், அரசின் செயல்பாடுகள் உள்ளன. இடைக்கால தலைவராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டது சட்ட விரோதமாகும்.

புதிய தலைவரை நியமிக்க, உயர்மட்ட குழு கூட்டத்தை உடனடியாக பிரதமர் கூட்ட வேண்டும். அலோக் வர்மா குறித்த சிவிசி அறிக்கை, நீதிபதி பட்நாயக் அறிக்கை, கடந்த 10ஆம் திகதி நடந்த உயர் மட்ட குழு கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

சி.பி.ஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவிற்கிடையே மோதல் ஏற்பட்டிருந்தது. இதனால், இரண்டு பேரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியிருந்தது.

இதனை எதிர்த்து அலோக் வர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வர்மாவை சி.பி.ஐ இயக்குநராக நியமித்தது.

மேலும், அவர் கொள்கை முடிவு எதையும் எடுக்கக்கூடாது என்றும், அவரது பதவி குறித்து பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய உயர் மட்ட குழு கூடி முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டது.

அதன் பின்னர், கடந்த 10ஆம் திகதி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சிக்ரி ஆகியோர் கூடி ஆலோசனை நடத்தியிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து சி.பி.ஐ இயக்குநர் பதவியிலிருந்த அலோக் வர்மா, தீயணைப்பு துறை இயக்குநராக மாற்றப்பட்டார். இடைக்கால தலைவராக நாகேஸ்வர ராவ் நியமிக்கபட்டார்.

எனினும் தனது பதவியை ஏற்க மறுத்த அலோக் வர்மா, பதவியை ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 8867 Mukadu · All rights reserved · designed by Speed IT net