ஒரு வயதுக் குழந்தைக்கு சிகரெட்டால் சுட்டு சித்திரவதை!
ஒரு வயதும், பத்து மாதமுமான குழந்தையை சிகரெட்டால் சுட்டு சித்திரவதை செய்த நபர் சியம்பலாண்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத மனைவியின் குழந்தையையே குறித்த நபர் இவ்வாறு கொடூரமாக சித்திரவதை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவத்தை பற்றி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருப்பதை அறிந்த சந்தேக நபர் அந்த பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பிறகு, சந்தேக நபர் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், பல தந்திரோபாயங்களை பயன்படுத்தி பெண் பொலிஸ் அதிகாரியை நியமித்து அவருடன் தொலைபேசி ஊடாக ஒரு காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர் புதிய காதலியை பார்க்க தொம்பகவெல நகரத்திற்கு வந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பிரதேசத்தைச்சேர்ந்த சுகத் என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குழந்தையின் தாயார் தற்போது வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.





