என்னை நாட்டுக்காக அர்ப்பணிக்கத் தயார்!
நாட்டுக்காக என்னை அர்ப்பணிப்பதற்கான எத்தகைய பொறுப்புக்களையும் ஏற்கத் தயார் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் இன்னும் உறுதியான நிலைமை தேசிய அரசியலில் இன்னும் உருவாகவில்லை. தேர்தல் குறித்து தற்போது அனைவரும் தமது கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.
நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியது. மக்கள் தமது வாக்குப் பலத்தின் மூலம் பொருத்தமான தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
நாட்டில் இடம்பெற எதிர்பார்த்திருக்கும் தேர்தல்களான ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நாட்டில் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாக உள்ளன.
அரசியல் நெருக்கடி ஏற்பட்டு தற்போதும் ஒரு உறுதியற்ற ஆட்சியே நாட்டில் காணப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையில் எதிர்காலம் குறித்து அனைத்துத் தரப்புக்களும் சிந்தித்துச் செயற்பட வேண்டும்” சமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.