தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிக்கிறது!
மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்காகவே அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை உருவாக்க முயற்சிப்பதாக நீதிக்கான பெண்கள் அமைப்பின் தலைவர் சாவித்ரி குணசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
சமூக, மதத்திற்கான கேந்திர மத்திய நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர்,
“இந்த புதிய அரசியலமைப்பு ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றும் ஒரு செயற்பாடாகவே கருதப்படுகின்றது.
முதலில் அரசாங்கம் முறையாக இடம்பெற வேண்டிய தேர்தல்களை நடத்த வேண்டும். அதன் பின்னரே ஏனைய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனை விடுத்து தேர்தலை பிற்போட முயற்சித்தால் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம்“ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு, மாகாணசபை தேர்தலை புதிய முறையில் நடத்துவது சாத்திமில்லையென்றால், பழைய தேர்தல் முறையிலே மாகாண சபை தேர்தலை அரசாங்கம் விரைவாக நடத்த வேண்டும் என நீதிக்கான பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி பழைய தேர்தல் முறையில் தேர்தல் நடைபெறும் பட்சத்தில், புதிய தேர்தல் முறையில் அறிமுகம் செய்யப்பட்ட 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பழைய தேர்தல் முறையினுல் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.